அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சொந்தப் பணத்திலிருந்து 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,500 கோடி) வரை செலவிடத் தயார் என்று டானல்டு டிரம்ப் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் அதிபரான அவர், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டி வருகிறார். கட்சியினரிடையே அதிக ஆதரவைப் பெற்றவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், ஜெப் புஷ், எச்.பி. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லி ஃபியோரினா உள்ளிட்டோர் இதில் குறிப்பிடத் தக்கவர்கள்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தேர்தல் செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வருகின்றனர். இதையொட்டி, தொழிலதிபர்கள் பெரும் தொகைகளை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்யத் தயார் என டானல்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.
“”நன்கொடை அளிப்பவர், அதற்குப் பிரதி பலனை எதிர்பார்ப்பார். எனக்கு நன்கொடை தேவையில்லை. ஆண்டுக்கு 40 கோடி டாலர் (சுமார் ரூ.2,600 கோடி) சம்பாதிக்கிறேன். தேர்தலில் 100 கோடி டாலர் செலவானாலும் அதற்கு நான் தயார்” என்று அவர் கூறினார்.
அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடையே 22 சதவீத ஆதரவு பெற்று, டானல்டு டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
2