செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிறுகதை | கனவுகள் | விமல் பரம்

சிறுகதை | கனவுகள் | விமல் பரம்

11 minutes read

லண்டன் குளிரில் உடல் நடுங்கியது. வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். வீடு அமைதியாகயிருந்தது. நேரம் பார்த்தேன் மூன்று மணி. வேலை முடிந்து மதன் வர ஐந்து  மணியாகும்.  குளித்துவிட்டு வந்து கைப்பையில் வைத்திருந்த பணக் கவரை  எடுத்துச் சென்று சுவாமி அறையில் விளக்கேற்றினேன்.

கவரைத் தட்டில் வைத்து கைகூப்பி கடவுளுக்கு நன்றி சொன்னேன். என் மனம் சந்தோசத்தில் மிதந்தது. என் பணம். இங்கு வந்து நான் சம்பாதித்த முதல் பணம். இதில் நான் விரும்பியதைச்  செய்யலாம். அதற்கு மதன் சம்மதிப்பாரா…? சம்மதிக்கவேண்டும். அதற்காகத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன்.   மனதின் ஏக்கம் பெருமூச்சாய் வெளிப்பட்டது.

திருமணமாகி  மதனுடன்  லண்டனுக்கு வந்து மூன்று வருடமாகிவிட்டது. வரும்போது ஒரே ஒரு கனவோடு தான் வந்தேன். அம்மாவையும் தங்கை மீனாவையும்  ஒரு குறையுமில்லாமல் சந்தோசமாய் வைத்திருக்கவேண்டும், இனி அவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற நினைப்பைத் தவிர வேறு எந்த ஆசையுமில்லை. ஆனால்  அதைத்தவிர நான் நினைத்துப் பார்க்காத  வாழ்வு எனக்கு கிடைத்திருக்கிறது.

ஆனாலும் முழுமையான சந்தோசத்தை  என்னால் அனுபவிக்க முடியவில்லை. எதைப்பார்த்தாலும் அம்மா, மீனாவின்  நினைவுதான். முன்பு  மூவரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம். அவர்களை விட்டு பிரிந்து இருப்பது கவலையாகயிருந்தாலும் அடிக்கடி தொலைபேசியில் கதைப்பதால் சிறிது ஆறுதலாகயிருந்தது. என் கவலையை அம்மாவிடம் சொன்னால்…

“எங்களைப்பற்றி நீ கவலைப்படாத.  தெரியாத நாட்டில  உன்னைச் செய்து குடுத்திட்டு நான் பயந்து  கொண்டிருக்கிறன். இதால உனக்கு பிரச்சனை வரக்கூடாது. நீ சந்தோசமாய் இருந்தால் எனக்குப் போதும். உன்னையும் மீனாவையும் பாத்த எனக்கு இப்ப மீனாவைப் பார்க்கிறது கஷ்டமில்லை.” என்பாள்.

” மீனா தொடந்து படிக்கவேணும், ஆசைப்பட்டதை வாங்கவேணும்.  நான் தானே உதவவேணும்.”

“இப்ப ஒண்டும்  வேண்டாம். இப்பதானே போனனி.  உன்ரை வாழ்க்கையைப்பார். சந்தோசமாய் இரு. கொஞ்ச காலம் போகட்டும்.  பிறகு எங்களைப் பற்றி  யோசிக்கலாம். மருமோனுக்கும் எங்களைப்பற்றி தெரியும் தானே” அம்மா கண்டிப்புடன் சொன்னதும் சரியென்று இருந்தேன்.

ஆனாலும் மனதுக்குள் கவலையாகவே இருந்தது.  எனக்கு ஏழு வயது, தங்கை மீனாவுக்கு இரண்டு வயதாகயிருக்கும் பொழுது அப்பாவை ஒரு விபத்தில் இழந்துவிட்டோம். அம்மாவுக்கு அப்பாவை இழந்த துக்கத்தை விட எங்கள்  இருவரையும் எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற கவலை தான் அதிகமாகயிருந்தது. அப்பா, அம்மாவுக்கு நெருங்கிய உறவினர்கள் என்று யாருமில்லை. வருமானத்துக்கு என்ன செய்வது  என்று மிகவும் பயந்துவிட்டாள். அப்பாவிற்கு நிரந்தர வருமானமில்லை.  கிடைக்கும் வேலைகளைச் செய்து கொடுக்கும் பணத்தில் எங்கள் வாழ்க்கை போனதால் அம்மாவால் சேமித்து வைக்கவும் முடியவில்லை. அப்பாவின் இறுதி சடங்குகள் செய்வதற்குக் கூட எம்மிடம்  பணமிருக்கவில்லை. ஆனால், எம் கிராமத்திலுள்ள நடைமுறையில் இறுதி நிகழ்வுக்கு வந்தவர்கள் உதவிய பணத்தில் அப்பாவின் இறுதிப்பயணம் கௌரவமாக நடந்ததாக அம்மா இன்றும்  சொல்லி ஆறுதல் அடைவாள்.

வருமானத்துக்காக  அம்மா தன்னிடமுள்ள ஒரே நகையை விற்று தையல் மெஷின்  வாங்கினாள்.  தனக்குத்தெரிந்த தையல் வேலையை முன்பு தெரிந்தவர்களுக்கு உதவியாய்  அவர்கள் வீட்டுக்குப் போய்   தைத்துக்கொடுத்த அம்மா இப்பொழுது  வருமானத்துக்காகத் தைக்கத் தொடங்கினாள். அயலவர்களும் அம்மாவின் நிலைமை அறிந்து தெரிந்தவர்களுக்கும் சொல்லி அம்மாவிற்கு உதவினார்கள். ஆனாலும் அதில் நிரந்தர வருமானம் வருவதில்லை.  திருமண காலங்களில், நல்ல நாள் பெருநாட்களில், நிறைய ஓடர்கள் வரும்.  சில நாட்களில் இல்லாமலும் இருக்கும். அந்த  நேரங்களில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டமாகயிருக்கும். விபரம் தெரியாத அந்த சிறு வயதில் எத்தனை நாட்கள் நானும் மீனாவும் அழுதிருப்போம். பின் நிலைமையறிந்து  நான் பொறுத்துக் கொண்டாலும் மீனா மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து தனக்கும் வேண்டுமென்று அழுது அடம்பிடிப்பாள்.  நாம் வளர வளர செலவுகளும் அதிகரித்துக்கொண்டு போனதால் ஸ்கூல் படிப்போடு, அம்மா தடுத்தும் கேளாமல்  வீட்டில் நின்று விட்டேன். மீனா தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாள்.

ஒருநாள் அம்மா தைத்துத் தந்த சாறி பிளஷுக்கு   பட்டன் தைத்துக்கொண்டு இருந்தேன். அம்மாவின் முகம் வாடியிருந்தது.

” என்னம்மா யோசிக்கிறீங்கள்? ” என்று கேட்டேன்.

” இந்த மாதம் வருமானம் குறைவாயிருக்கு. எப்படி செலவுகளைச்   சமாளிக்கப் போறனோ தெரியேலை ” என்றாள்.

அம்மா சொன்னதைக்கேட்க எனக்கும் கவலையாகயிருந்தது.  நாம் கதைத்துக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு பவளமக்கா பெரிய பையோடு வந்தா.

” என்ன செய்யிறீங்கள்..எனக்கு தைக்க நிறைய துணியிருக்கு..கெதியாய்

தைச்சுத் தரவேணும்.” என்றா.

அம்மாவின் முகம் பட்டென்று மலர்ந்தது.

“எப்ப வேணுமெண்டு சொல்லுங்கோ அக்கா. சொன்ன நாளுக்குள்ள தைச்சுத்

தாறன்” என்று அம்மா சொன்னாள்.

“மகன் வெளிநாட்டிலயிருந்து வந்திருக்கிறான். அவனோடை போற இடங்களுக்கு அவன் வாங்கித்தந்த சீலையைக் கட்டிக்கொண்டு போனால் அவனுக்கும் சந்தோசமாய் இருக்கும் தானே”

“ஓம் அக்கா, நான் இரண்டு நாளிலை தைச்சுத் தாறன்”

கதைத்துக்கொண்டே அம்மா துணிகளை அளந்து வெட்டத் தொடங்கினாள்.

இரண்டாம் நாள் தைத்த உடுப்புகளை எடுக்கவந்த பவளமக்கா தன்  மகன்

“வீட்டையும் இடிச்சு பெரிசாய் கட்டவேணும் எண்டு சொல்லுறான். போய் காசு  அனுப்ப கட்டத்தொடங்கப் போறம். ” என்றா.

எங்கள் ஊர் கிராமமாய் இருந்தாலும்  அதிகமானோர் வெளி நாடு போகத்தொடங்கியதால் சிறு வீடுகள் பெரிய கல் வீடுகளாக மாறத்தொடங்கி விட்டது.

“உனக்கும் பிள்ளையள்  வளந்து  கொண்டு வருகினம். உழைக்கிறதில சேத்து வைச்சிருக்கிறியே….கழுத்துக்கும், கைக்கும் நகை ஏதாவது  செய்து போட்டு, கொஞ்சம் வசதியான இடத்தில செய்து கொடுத்தால்…அதுகள்  உன்னைப்போல கஷ்டப்படாமல் இருக்கிங்கள்..” எதிர் வீட்டுப் பாட்டி சொன்னது  கேட்டு அம்மாவின் முகத்தில் கவலை தெரிந்தது.

“எங்க பாட்டி, வாற  காசு சாப்பாட்டுச் செலவுக்கே போகுது. சேக்கத்தான் வேணும். என்ன செய்யிறது எண்டு  தெரியேலை.” என்றாள்  அம்மா.

அன்று இரவு அம்மா  நித்திரையில்லாமல் யோசித்துக்கொண்டு படுக்கையில் படுத்திருப்பதைப் பார்க்க கவலையாகயிருந்தது. பவளமக்கா சொன்னமாதிரியே மகன் போன மூன்று மாதத்தில் வீடு இடித்து கட்டிட வேலைகள் தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டுக்கு  வரும்போதெல்லாம்  புது வீட்டைப் பற்றியும் அதன் செலவுக்கு மகன் பணம் அனுப்புவது பற்றியும்  சொல்லிக்கொண்டேயிருப்பா.

எல்லோரும் தங்கள் கதைகளைச் சொல்லும்போது அம்மா பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பாள். சிறுவயதில் அம்மாவோடு படித்த தோழி. திருமணமாகி கனடாவிற்குப் போய் நீண்ட நாட்களின் பின்  குடும்பத்தோடு அம்மாவைப் பார்க்க வந்திருந்தா.அம்மாவின் வயது தான் அன்ரிக்கும்  என்று நம்பமுடியவில்லை. அம்மாவை விட இளமையாகயிருந்தா. அம்மாவைப்பார்த்து,

“என்ன கோலமிது.  தலை நரைச்சு கிழவியாய்  வந்திட்டாய்.” என்றா.

நான் அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன்.  பத்து வயது கூடிய தோற்றத்தில் இருந்தாள். கவலைகளும், கஷ்டங்களும் அம்மாவை இந்த கோலத்திற்கு கொண்டுவந்து விட்டது .

“என்னதான் கஷ்டம் வந்தாலும் மீராவின் படிப்பை ஏன் நிப்பாட்டினனி. பிள்ளைகள் படிச்சிருந்தால் வேலை பாத்து தங்கட காலிலை நிக்குங்கள்.  படிச்ச இடத்தில செய்து குடுக்கலாம். நல்லாயிருக்கிங்கள். ” என்றா அன்ரி.

“நான் நிற்பாட்டேல. வீட்டுக்கஷ்டம் பாத்து அவள் தான் படிப்பை விட்டிட்டாள்.” அம்மா சொன்னதும் என்னைப் பார்த்து,

“இப்ப தெரியாது. பிறகு நினைச்சு கவலைப்படுவாய் ” அன்ரி  சொன்னா. அன்று எனக்கு தெரியவில்லை. அன்ரி போகும் போது அம்மாவிடம் பணம் கொடுத்தா. மறுத்தும் விடவில்லை.

“இன்னொரு தையல் மெஷினை வாங்கினால் மீராவும் தைக்கலாம். கூடுதலாய் பணமும் வரும் என்று  அம்மாவிடம் கொடுத்தா. வெளிநாட்டு  பண உதவி கிடைத்தது அதுதான் முதல் தடவை.

அன்ரி வந்து போன பின்   அம்மாவின் மனதிலும் வெளிநாட்டில் செய்து கொடுத்தால் வசதியாக இருப்பேன்  என்று நினைக்கத்தொடங்கி விட்டாள். பணம் சேமிக்க வேண்டும், நகைகள் செய்ய வேண்டும் என்று புடவைக் கடைகளில் ஓடர்கள் எடுத்து தையல் வேலைகளை அதிகமாக்கினாள். எந்த நேரமும் தையல், தையல் என்று அம்மா  கஷ்டப்படுவதைப் பார்க்க அம்மாவின் ஆசைக்காக  வெளிநாட்டுக்கு போகவேணும் பணம் அனுப்பி அம்மாவையும், மீனாவையும் சந்தோசமாய் வைத்திருக்க வேணும் என்ற  ஆசையும், தொடர்ந்து படிக்கவில்லையே என்ற கவலையும் எனக்குள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு போனது.

ஒருமுறை பவளமக்காவுடன் அவாவின் மாமாவின்  மகள் தேவியும் வந்திருந்தாள்.

” கலியாணம் கட்டி லண்டனுக்குப் போய் இரண்டு வருஷம் தான். இப்ப மனுசனுடன் சண்டை .விட்டிட்டு வந்திட்டாள்.”  என்று பவளமக்கா சொன்னதும்  எங்களுக்கு திக்கென்றது.

“விட்டிட்டு வாறளவுக்கு என்ன பிரச்சனை.” அம்மா கேட்டாள்.

“அவனுக்கு ஏற்கனவே அங்க கலியாணமாச்சு. போன பிறகுதான் இவளுக்குத் தெரியும். அன்பாய் நாலு வார்த்தை கதைக்கிறதில்லை.அடிக்கடி  சண்டை பிடிச்சுக்கொண்டு வீட்டை விட்டுட்டு போயிடுவான். அவனோடை இருக்கேலாது  எண்டு இவள் வந்திட்டாள்.” தேவியைப் பரிதாபமாய் பார்த்துக்கொண்டு பவளமக்கா சொல்ல நான்  தேவியை பார்த்தேன். முகத்தில் வேதனை தெரிய கண்களில் கண்ணீரும் எட்டிப்பார்த்தது.

“அங்க கலியாணம் செய்தால் பிறகு ஏன் இங்க செய்தவன்.” பதறிப்போய்  அம்மா கேட்டாள்.

“வேற எதுக்கு  சீதனம் வாங்கத்தான். காசுக்காகச் செய்தவனாம். வெளி நாட்டு மாப்பிளையெல்லாம் திறமே….இப்பிடியும் இருக்குதுகள்.” என்று சொன்னதைக்கேட்டு அம்மா பயந்துவிட்டாள்.

“எல்லாரும் அப்பிடியில்லை மாமி. என்ர தலை எழுத்து இப்படியாகிவிட்டது.”

தேவி கவலையை மறைத்து சிரித்துக்கொண்டு சொன்னாள்.

செலவுகளைக் குறைத்து கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து இரண்டு நகை  செய்யமுடிந்தது.  அன்று பவளமக்கா வீட்டுக்கு வந்திருந்தா.

“அக்கா, எனக்குத் தெரிஞ்ச பெடியன் லண்டனிலயிருந்து வந்திருக்கிறான், நல்ல குணமான பெடியன்.  தாய் கலியாணம் செய்து தான்அனுப்ப வேணும், நல்ல பொம்பிளையிருந்தால் சொல்லு எண்டு கேட்டா. நான் உங்களைப்பற்றி சொன்னனான். மீராவின் குறிப்பைத் தாங்கோ.குடுத்து பொருத்தம் பாப்போம்.”

அம்மாவின் முகத்தில் பயம் தெரிந்தது.

“வேண்டாம் அக்கா, வெளிநாடு போனால், வசதியாயிருக்கிங்கள் என்று ஆசைப்பட்டு செய்து கொடுத்தால், ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்யிறது. தேவிக்கு நடந்த கொடுமையை நினைக்க பயமாயிருக்கு.  வசதியில்லாவிட்டாலும்  என்ர கண்ணுக்கு முன்னால இங்கேயேயிருக்கட்டும்.” அம்மா மூச்சு விடாமல்  சொன்னதைக் கேட்டதும் எவ்வளவு தூரம் பயந்திருக்கிறாள் என்று தெரிந்தது.

“என்னக்கா நீங்கள், ஒருத்திக்கு இப்படி நடந்தால்…எல்லாருக்கும் அப்பிடியே நடக்கும். நல்ல குடும்பம், நல்ல பெடியன் எண்டபடியாலதானே நான் வந்து கேக்கிறன். சரிவந்தால் நீங்களும் நல்லாய் விசாரிச்சுப் பாருங்கோவன்.”  என்று சொன்னா.

தேவியின் கதையைக் கேட்டபின்   அம்மா இங்கும் பல குறிப்புகள் பார்த்து விட்டாள். பொருத்தம் என்று வந்தால் சீதனமாக வீடு,நகை,பணமென்று கேட்பார்கள். அவர்கள் கேட்கும் தொகையை  நிச்சயமாக எங்களால் கொடுக்கமுடியாது. இதனால் மனம் நொந்து போயிருந்த அம்மாவுக்கு பவளமக்கா சொன்னதை விடவும் முடியவில்லை.

“நல்ல பெடியன் எண்டாலும் சீதனம் கேட்பினமே.நான் என்ன செய்ய…”

“நல்ல குணமாயிருந்தால் போதும் சீதனம் எதிர்பாக்க மாட்டினம். குறிப்பைத்தாங்கோ. மீராவுக்கும் வயது ஏறிக்கொண்டு போகுது. நல்ல இடம் வரேக்க  செய்து கொடுத்திடவேணும்.” என்று சொல்லி அம்மாவிடம் குறிப்பை வாங்கிக் கொண்டு போனா. ஒரு கிழமைக்குள் பொருத்தம் சரிவந்து மதனும் மதனின் அம்மாவும்    பவளமக்காவுடன் ஒரு நல்ல நாளில் வீட்டுக்கு வந்தார்கள்.  அவர்களைப்  பார்த்ததும், வசதியில்லை, படிப்பில்லை வேண்டாம் என்று  சொல்லிவிடுவார்களோ என  மனதுக்குள் ஒரு பயமிருந்தது.

“இந்த வீட்டை மீராவுக்கு குடுக்கலாம்…ஆனால் நாங்கள் இருக்கிறதுக்கு வேற  இடமில்லை…” அம்மா தயங்கியபடி சொன்னாள்.

“தெரியும் நீங்கள் இருங்கோ..உங்களைப் பற்றி அறிஞ்சுதான் வந்திருக்கிறம்.” தங்கள் சம்மதத்தையும் தெரிவித்து விட்டு நாளும் குறித்துவிட்டுப் போனார்கள்.  எங்கள்  வீட்டு நிலைமையை புரிந்துகொண்டு அவர்கள் சம்மதம் சொன்னதும் ஆடம்பரமில்லாமல் எளிமையாய் எங்கள் திருமணம் நடந்ததும் நம்பமுடியாத ஆச்சரியமாயிருந்தது. மதன் வீட்டுக்குப் போனபின்தான் அறிந்தேன்.

“படிப்பு காணாது வேண்டாம்.” என்று மதன் மறுத்ததும் மாமி தான் பிடிவாதமாக பிறகும் படிக்கலாம், கஷ்டப்பட்டாலும் நல்ல குடும்பம்,குறிப்பும் நல்ல பொருத்தம் என்று சொல்லி சம்மதிக்க வைத்தா என்று அறிந்ததும்   நடுங்கிவிட்டேன். கட்டாயப்படுத்தி செய்த வாழ்க்கை சந்தோசமாய் இருக்குமா…படிக்கவில்லை என்பதை சொல்லி சண்டை போடுவாரா… எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் படித்திருக்கவேண்டும். படிக்கவில்லையே என்ற கவலை மனதை அரித்தது.

லீவு முடிந்து லண்டனுக்குப் போகும்போது என்னையும் அழைத்துப்  போவதற்கு ஏற்பாடுகள் செய்து சரிவர நாம் லண்டனுக்குப் போவதற்கு ஆயத்தமானோம். வீட்டைத்தவிர வெளியுலகம் தெரியாத எனக்கு மிகவும் பயமாகயிருந்தது.என் பயத்தைப் போக்குவதற்கு மதன் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் என் பயம் சற்றும் குறையவில்லை.

“லண்டன் போனாலும் அடிக்கடி அம்மா,மீனாவுடன் கதைக்கலாம்.” என்று சொன்னார். வீட்டில் தொலைபேசி இல்லாததால் புதிதாகவொன்று வாங்கிக் கொடுத்தார்.

புறப்படும் நாளும் வந்தது. அம்மா முகத்தில் சந்தோசமிருந்தாலும் அதையும் மீறி கவலையும் தெரிந்தது.

“அக்கா இனி கவலையில்லை.பவளமக்கா மாதிரி நாமும் வசதியாய் இருக்கலாம்.  சொந்தமாய்   ரிவியும் வாங்கலாம். படம் பாக்க பவளமக்காவீட்டுக்கு போகத் தேவையில்லை ” கண்கள் மின்ன சந்தோசத்துடன் சொன்ன மீனாவைப் பார்த்து

“ஓம் இனி எங்களுக்கு கஷ்டமேயில்லை ” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பயத்தோடு லண்டன் வந்து இறங்கிய எனக்கு வீட்டைப் பார்த்து திகைத்துவிட்டேன். குக்கர் பழகி சமைக்கத் தொடங்கவே சில நாட்கள் பிடித்தது. ஒவ்வொரு நாளும் கணக்குப் பார்த்து தேவையானதை வாங்கி சமைத்துச் சாப்பிட்ட எனக்கு இங்கு கிழமைக்கு, மாதத்துக்கென்று தொகையாக வாங்கி அடுக்கியிருப்பதைப் பார்க்க இதுக்காக நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று நினைவு வரும். எந்த உணவைப் பார்த்தாலும் மீனாவின் நினைவாகவேயிருக்கும். உணவும் தொண்டைக்குள் இறங்காது. மீனா கதைக்கும்போது ” அக்கா என்ன  வாங்கினாய் , என்ன சாப்பிட்டாய்” என்பாள்.

“இங்க எப்பிடி சமைச்சு சாப்பிட்டாலும் ஊரில சமைக்கிறமாதிரி வராது.

தேங்காய்ப் பாலில்லாமல் வைக்கிற கறி ருசியே இல்லை.” என்று சமாளிப்பேன். இவர்களுக்கு இன்னும் ஒன்றும் செய்யவில்லையே என்று நெஞ்சு வலிக்கும்.

அம்மா சொன்னமாதிரி எங்கள்  நிலைமை தெரிந்ததால் மதன் தானாகவே உதவி   செய்வார் என்று காத்திருந்தேன்.  அவருக்கு உதவி செய்யும் எண்ணமே இல்லை. ஆனால் ,

“அம்மா, மீனா எப்பிடி இருக்கினம். அவர்களுடன்  கதைச்சியா…மீனா படிக்கிறாளா..கவனமாய் படிக்கச்சொல்லு”  என்று அடிக்கடி கேட்பார்.

என் படிப்பைப் பற்றியும் ஏதாவது சொல்வாரோ என்று நெஞ்சு படபடக்கும் . ஆனால் அதைப்பற்றி ஒன்றும்   சொன்னதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடங்கள் பார்க்கபோவோம், விதம் விதமான சாப்பாடுகள்…     உடுப்புகள் .எனக்குத் தேவையானதை பார்த்து, பார்த்து வாங்கித் தருவதில் ஒரு குறை காணமுடியாது. அம்மாவிடம் சொல்லும்போது

“நிம்மதியாய் இருக்கு. இது போதும் எனக்கு ” என்பாள்.

என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.

ஒரு வருடம் ஆனபின்பும் என்னால் சிறிதளவு பணம் கூட அனுப்ப முடியவில்லையே என்ற கவலை மனதை வாட்டிக்கொண்டே இருந்தது.

கேட்டுப்பார்க்கலாமா என்று நினைத்தபோது,  அன்று வேலை முடிந்து வந்த  மதனின்  முகத்தில் கவலை தெரிந்தது.

” உனக்கு ரவி, கலாவைத் தெரியும் தானே.” என்று கேட்டார்.

எங்களுக்குப் பிறகு திருமணமாகி இங்கு வந்தவர்கள். ரவி மதனுடன் வேலை செய்கிறார். நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன்.

“ஓம் தெரியும் . ஏன் அவர்களுக்கென்ன ” கேட்டேன்.

“இரண்டு பேருக்கும் பிரச்சனையாம்.   வந்தவுடனே நிலைமை தெரியாமல் ஊருக்கு  அனுப்ப காசு கேட்டு சண்டையாம். கலா படிச்சது. யோசிக்க வேண்டாமே…, என்னைப்போல   ரவிக்கும் ஊருக்குப் போய்  கலியாணம் செய்து இங்க கூட்டி வந்தது, வீடு எடுத்து சாமான் வாங்கினது எண்டு சரியான செலவு. கடன் குடுத்து முடிய எவ்வளவு காலம் செல்லுமோ..அதைப்பத்தி ஒண்டும் யோசிக்கிறேல காசு எண்டு கேட்டால் அவன் என்ன செய்யிறது. எனக்கு சொல்லி கவலைப்படுறான். பாவம் ” என்றார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. திகைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.   நான் கேட்க நினைத்தது தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.  கலாவின் படிப்பைப் பற்றி சொன்னதும் வாயையும் இறுக மூடிக்கொண்டேன்.  படிக்கவில்லையே  என்ற கவலை மேலும் அதிகமாய் வளர்ந்துகொண்டே போனது.

கல்யாணவீடு, பிறந்தநாள் பார்ட்டிகளுக்குப் போனாலும் என்னால் கலகலப்பாக சிரித்துப் பேசமுடியவில்லை.

மதன் இதைக்கவனித்து” ஏன் இப்பிடி இருக்கிறாய். எல்லாரும் சந்தோசமாய்,

கலகலப்பாய் இருக்கத்தான் பார்ட்டிக்கு வாறது. உனக்கு இங்க வந்தால் உன் சந்தோசம் காணாமல் போயிடும். மற்றவர்கள் மாதிரி நீயும் சந்தோசமாயிரு ” என்பார்.  என்னை மாற்றிக்கொள்ள நினைப்பேன் ஆனால் முடியவில்லை. இந்த நேரத்தில்தான் தேவகியை ஒரு பார்ட்டியில் சந்தித்தேன்.

” மீரா,உங்களை வேற பார்ட்டிகளில் பாத்திருக்கிறன். அமைதியாய் இருப்பீங்கள். கதைக்க மாட்டிங்களா.”  சிரித்துக்கொண்டு கேட்டாள்.

“தேவை வந்தால் கதைக்கிறது .”  என்றேன்.

” நான் வந்து ஆறு வருசமாகுது. வந்த புதுசில எனக்கும் சரியான பயம். படிப்பைக் குழப்பி கலியாணம் செய்து அனுப்பி விட்டினம். இங்கிலிஷும் தெரியாது. நான் பட்டபாடு. இவரிட்டை நெடுகவும் பேச்சு வாங்குவன்.    இவரில்லாமல் ஒரு இடமும் போகமாட்டன்.” தேவகி சொன்னதைக்கேட்டதும் என்னைப் போலவே இவளும் இருந்திருக்கிறாள் என்ற நிம்மதி ஏற்பட்டது.

“நம்பேலாமல் இருக்கு. இப்ப நல்லாய் கதைக்கிறீங்கள்.” என்றேன்.

” பிறகென்ன,  எத்தனை நாளைக்கு  இவருக்குப் பின்னால ஒழியுறது. இங்க வந்த பிறகு இவங்கட மொழி தெரிஞ்சிருக்கவேணும் எண்டு இங்க  இங்கிலீஷ் படிச்சன். இப்ப வேலைக்கும் போறன், காரும் பழகிட்டன். இடத்துக்கேற்ப  எங்களை மாற்றிக்கொண்டால் தயக்கமும் பயமும் போயிடும் இல்லையா..”

தேவகி சொல்வதைக்கேட்க நொந்த என் மனதுக்கு ஆறுதலாகயிருந்தது.

“என் படிப்பையும் இடையில   விட்டிட்டன் ….” தயக்கத்துடன் சொன்னேன்.

” இனியும் படிக்கலாம் தானே.  இங்கிலீஷ் தெரிஞ்சுயிருந்தால்  எங்க போனாலும் சமாளிக்கலாம். நான் படிச்ச இடத்தை சொல்லட்டுமா..”

” இங்க படிக்க பயமாயிருக்கு.. ” என்றேன்.

” நானும் பயந்துகொண்டு தான் போனனான். எங்களைபோல் நிறையப்பேர் இருக்கினம். பயமில்லாமல் போய் படிக்கலாம்”. என்றாள்.

படிக்கவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதைவிட படிக்கிறது

நிம்மதி. மதனிடம் கேட்டு முடிவு செய்யலாமென்று  அட்ரஸ்ஸை வாங்கினேன்.

காரில் திரும்பும் போது,

” எங்க  போனாலும் பேசாமல் இருப்பாய். இன்று தேவகியுடன் கன நேரம் கதைச்சுக்கொண்டிருந்தாய். என்ன விஷயம்…” என்று கேட்டு பதிலுக்காக காத்திருந்தார். மதன் என் படிப்பைப்பற்றி இதுவரை ஒன்றும் சொன்னதில்லை. படிக்க போறன் என்று  சொன்னால் என்ன சொல்வாரோ என்று தயக்கமாக இருந்தது. தேவகி சொன்னதைச் சொன்னதும் திகைப்பு அவர் முகத்தில் தெரிந்தது.

“உண்மையாகவா….நல்லவிஷயம்தானே.. நீ படிக்கவேணும் எண்டு நானும் விரும்பிறன். ”

“இதுவரை நீங்கள்  படிப்பைப் பற்றி சொன்னதில்லை….”. தயக்கத்துடன் கேட்டேன்.

“படிப்பை விட்டிட்டு வீட்டோடை இருந்த உனக்கு அடுத்த ஊர் தெரியாது. பயத்தோட லண்டன் வந்தாய். உடனே படியென்றால் பயத்தில செத்திருப்பாய்.

உன் பயம் குறைந்து நீயாய் படிக்க நினைக்க வேணும். இனி  உனக்கும் பொழுது போகும். அட்ரஸ்ஸை   தா. எங்கையிருக்கு எண்டு பாக்கிறன் ” என்று வாங்கிப் பார்த்தார்.

முதல் நாள் தேவகியோடு போனதும் பயந்து பயந்து படித்ததும் இப்ப நினைத்தாலும் நம்பமுடியவில்லை. என் முயற்சியும் மதனின் உதவியும் சரளமாக கதைக்காவிட்டாலும் மற்றவர்கள் கதைப்பதை விளங்கி ஒன்றிரண்டு

சொல்லில் பதில் சொல்லி சமாளிக்கும் அளவுக்கு வந்தது என் பயத்தைக் குறைத்து உற்சாகத்தைக்  கொடுத்தது.  இன்னும் படிக்கவேணும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

ஒரு நாள் மதன் ” என் சிநேகிதனின் கடையில் ஒரு வேலைஇருக்காம். அவன் மனைவியும் அங்கதான் வேலை செய்யிறா. தெரிஞ்ச இடமெண்டால்உனக்கும் பயமிருக்காது.” என்றார்

” நானா..  வாற ஆக்களுடன் கதைக்கவேணும். எனக்கு பயமாயிருக்குது.வேண்டாம் ” என்றேன்.

” பயத்தைப்போக்கத்தானே போகச்சொல்லுறன். கதைச்சால்தானே முன்னேற்றம் வரும். உனக்கு விருப்பமெண்டால் போய்வா. ” என்றார்.

பயமாயிருந்தாலும் நான் உழைத்த காசு கையில் இருந்தால் அம்மாவுக்கு அனுப்பலாம் என்ற ஆசையில் போகத்தொடங்கினேன். கடையில் வருபவர்களுடன்  வாய்குழறி, தடக்கி,விழுங்கி, கதைத்து ஒரு மாதம் பயிற்சி எடுத்து இந்தமாதம் வேலை செய்து முதல் மாதச் சம்பளமும் எடுத்துவிட்டேன். இந்நிலைக்கு  வர மூன்று வருடமாகிவிடது.

இனியெல்லாம் மதனின் கையில்தான் இருக்கிறது. இவ்வளவு நாளும் கேளாமல் இப்ப கேட்டால் உழைக்கிற திமிரிலை கேட்கிறன்  என்று கோபப்படுவாரோ….இல்லை சம்மதிப்பாரோ…கடவுளை வேண்டிக்கொண்டு  மதனுக்காகக் காத்திருந்தேன்….

” என்ன யோசிக்கிறாய். காசு வந்த சந்தோசம் உன்ர முகத்தில் காணேலை”   மதனின் குரல்.

நான் கவரை எடுத்துவந்து நீட்டினேன்.” நீயே வைச்சிரு. என்ன செய்யப்போறாய்.”  அவர் கேட்டதும் தயங்கிக்கொண்டு

Drawing2 (3)

” இதில அம்மாவுக்கு பாதியை அனுப்பட்டுமா..” என்றேன்.

” ஏன் பாதி முழுதையும் அனுப்பு. முதல் முதல் அனுப்பப்போறாய். கூட அனுப்புவம். நானும் தாறன்.வீட்டுக்குத் தேவையான சாமான்கள் முக்கியமாய் மீனாவுக்கு  ரிவியும் வாங்கட்டும்.” என்றார்.

நான் திகைத்துப்போய் மதனைப்பார்த்தேன்.என்னால் நம்பமுடியவில்லை.

” என்ன பாக்கிறாய். அம்மாவையும், மீனாவையும் சந்தோசமாய், வசதியாய் வைச்சிருக்கவேணும் எண்டதுதானே உன்ரை  ஆசை.”

” எப்பிடி… நான் உங்களுக்கு சொல்லவேயில்லை.”

” உன்னைச் சந்தோசப்படுத்த நான் என்ன செய்தாலும் உன்ர  மனம் தவிக்கிறது எனக்குத் தெரியாதா…”  என்றார்.

” உனக்கு ஒரு குறையில்லாமல் நான் பாக்கிறமாதிரி  அம்மா மீனாவை   நீதான் பார்க்கவேணும். இப்ப நீ உழைச்ச காசை அனுப்பேக்க கிடைக்கிற சந்தோசம் நான் தந்து  அனுப்பினால் உனக்கு கிடைக்குமா சொல்லு.  என்னிடம் வாங்கும் போது  உனக்கும் தயக்கம் இருக்கும். இனித்தான் உனக்குநிறைய பொறுப்பு இருக்கு.  மீனா யுனிவசிட்டி போனால் படிப்பிக்கவேணும் , கலியாணம் செய்து வைக்கவேணும், அம்மாவைப் பாக்கவேணும். என் உதவியிருந்தாலும்  நீயும்  தைரியமாய் இருக்கவேணும். இங்கு படிக்கிறதுக்கும் உழைக்கிறதுக்கும் வயதேயில்லை. எந்த வயதிலும் படிக்கலாம். இதை நீ உணரவேணும். அதற்காகத்தான்  நான் பொறுமையாய் இருந்தேன்.”

மனதை வருடும் குரலில் சொன்னார்.

என்னையே எனக்கு உணர வைத்த அந்த நொடி……, என்னை மறந்த சந்தோசத்தில்  அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டேன்…!

 

நிறைவு…

 

– விமல் பரம் –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.