ஹரியாணா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய, அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் அழைப்பு விடுத்தார்.
மனோகர் லால் கட்டர் தலைமையில், அந்த மாநில தொழில் துறை அமைச்சர் அபிமன்யு, பல்வேறு துறை உயரதிகாரிகள், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என மொத்தம் 19 பேர் கொண்ட குழு, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு 10 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக இந்தக் குழு, நியூயார்க் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றது.
அங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் பேசியதாவது:
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஹரியாணாவின் பங்கு 3.4 சதவீதமாக உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதத்துக்கு மேல் உயர்த்தவும், உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகியவற்றில் 4 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, தகவல் தொழில்நுட்பம், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, மருந்தியல் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும். ஹரியாணாவில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்று கட்டர் உறுதியளித்தார்.