இலங்கை போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது, சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் போர் குற்றம் பற்றி சர்வதேச விசாரனை வேண்டும் என கூறிவந்த அமெரிக்க கடந்த வாரம் தனது நிலையை மாற்றிக்கொண்டது. உள்நாட்டு விசாரணையே போதும் என்று கூறியது. இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தின் மாகாண சபை கூட்டத்தில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் ” இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறுவதை ஏற்க முடியாது. நம்பகமான உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என்பதற்கு சட்டரீதியான வாய்ப்புகள் இல்லை. எனவே, இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக்கு ஏற்பாடு செய்யுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்படுள்ளது.