சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் முடிவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர்,
“உங்களின் வேதனைகளை நன்கு அறிவேன். அதனால்தான், காணாமல்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, இனப்படுகொலை சம்பந்தமான அறிக்கைகளையும், தீர்மானமாக நிறைவேற்றியதுடன், உரியவர்களிடம் அறிக்கைகளை சமர்பித்துள்ளோம்.
நீதிமன்றில் இருக்கும் போது, குற்றவாளிகளை விசாரித்து தண்டனைகளை வழங்குவோம், இது அரசியலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவ்வாறு வழங்க முடியாது.
அதேபோன்று நாட்டின் நன்மைகளை பார்த்தே நடவடிக்கை எடுக்கின்ற காரணத்தினால் தான், காணாமல்போனோர் மற்றும் அனைத்துலக நீதி விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.
இந்த அரசாங்கம் அரசியல் கைதிகளை எப்போதே விடுவித்திருக்க முடியும். தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த அதிபர் தேர்தலில் மிகப்பெரியளவிலான வெற்றியைக் கொடுத்திருந்தார்கள் தமிழ் மக்கள். எனவே, அரசியல் கைதிகளை பெருவாரியாக விடுதலை செய்திருக்கலாம்.
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளலாம் தானே என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் கேட்டபோது, அனைத்துலக விசாரணையை எடுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் எனக் கூறினார்.
அதனால், அனைத்துலக விசாரணை மேற்கொள்ள முடியாது என்றும், அதனால் தான் சிறிலங்காவின் உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.