அணுசக்தி நடவடிக்கை தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 161 வாக்குகளும், தீர்மானத்துக்கு எதிராக 59 வாக்குகளும் பதிவாகின என்றும் 13 பேர் வாக்களிக்கவில்லை என்றும் ஈரான் அரசின் செய்தி நிறுவனமான “ஐஆர்என்ஏ’ தெரிவிக்கிறது.
அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. மேலும், ஈரான் மீது ஏராளமான பொருளாதரத் தடைகளையும் வல்லரசு நாடுகள் விதித்தன.
இந்நிலையில், அணு சக்தி நடவடிக்கை தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுடன் ஈரான் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் விளைவாக, அந்த 6 நாடுகளுக்கும், ஈரான் அரசுக்கும் இடையே “ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைத் திட்டம்’ என்ற பெயரிலான ஒப்பந்தம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி கையெழுத்தானது.
இதன்படி, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம், அணு ஆராய்ச்சிகளை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்பதை ஈரான் அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சர்வதேச அணு சக்தி முகமை, ஐ.நா.வின் அணு சக்தி கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றிடம், அணு ஆராய்ச்சி தொடர்பான தமது நடவடிக்கைகள் அமைதிக்கானவை என ஈரான் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் பலனாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தின் பல அம்சங்கள் ஈரானுக்கு எதிராக உள்ளன என்று அந்நாட்டு எம்.பி.க்கள் புகார் கூறி வந்தனர். மேலும், ஈரான் அணு சக்தி முகமையின் தலைவர் அலி அக்பர் சலாஹி, மேற்குலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு சரணடைந்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை ஈரான் அரசு முறைப்படி அமல்படுத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
1