செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெடுக்குநாறிமலை ஆலயத்துக்குக் குடிதண்ணீர் வழங்க மறுத்த பொலிஸார்!

வெடுக்குநாறிமலை ஆலயத்துக்குக் குடிதண்ணீர் வழங்க மறுத்த பொலிஸார்!

1 minutes read

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்துக்கு வருகை தந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க பொலிஸார் மறுப்புத் தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தின் மகா சிவராத்திரி வழிபாடுகள் இன்று காலை முதல் இடம்பெற்று வந்திருந்தது. இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிஸார் ஆலய வளாகத்துக்குள் குடிதண்ணீர் எடுத்துச் செல்ல இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்ட குடிதண்ணீர் தாங்கி பொலிஸாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து குடிதண்ணீர் இன்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்ற போதும் அதனையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் மற்றும் ஆலய பக்தர்கள் குடிதண்ணீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்துக்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தல் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் குடிதண்ணீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை மூன்று மணியளவில் குடிதண்ணீரை வழங்க பொலிஸார் இணங்கினர்.

இதன்போது குடிதண்ணீருடன் உழவு இயந்திரம் வருகை தந்த போது குறித்த வாகனம் காட்டுப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானபோது அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிதண்ணீரையும் பொலிஸார் இன்று மாலை 6 மணியளவில் குடிதண்ணீர் தாங்கியை திறந்து வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.