கிளிநொச்சியில் இரணைமடு சந்தி அருகாமையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் நெல் தானிய களஞ்சிய சாலை உள்ளதாகவும் இனி வீதிகளில் நெல்லை காய வைக்கத் தேவையில்லை என்றும் இளம் கண்டுபிடிப்பாளர் விவசாய விரிவுரையாளர் ரஜீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவு இதோ…
விவசாயிகள் நெல்லை இயந்திரம் மூலம் காய வைக்க முடிவதுடன் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தியும் வைக்க முடிகிறது. முக்கியமாக இங்கே களஞ்சியப்படுத்தி வைக்கப்படும் நெல்லின் அன்றைய பெறுமதியின் 70% ஐ 7% வட்டிக்கு வங்கியில் கடனாக பெற்றுக் கொள்ள முடிவது விவசாயிகள் பலருக்கு தெரியாத ஒரு அம்சமாகும்.
இதனைப் பற்றி போதிய விவரம் விவசாயிகள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமையினால் , விவசாயிகள் இது இலாபகரமானது அல்ல அல்லது நஷ்டமானது எனக் கூறிக் கொண்டிருக்க, துரதிஷ்டவசமாக விவசாயிகள் இதனை பயன்படுத்துவது குறைந்து இடைத்தரகர்கள் அல்லது நெல் வியாபாரிகள் நெல் கொள்வனவாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ( அவர்களுக்கு விபரமும் கணக்கு பார்க்கவும் தெரிகிறது) மழையினால் பாதிக்கப்படுவது மற்றும் வீதிகளில் காய போடுவதனை தவிர்ப்பதற்கு இது ஒரு அருமையான மாற்று வழியாகும்.
எனவே அன்பார்ந்த விவசாயிகளே தானியக்களஞ்சியம் பற்றிய விடயங்களை முழுமையாக தெரிந்து கொண்டு உங்களது உற்பத்திகளை உடனடியாக கொள்வனவாளாருக்கு விற்காமல் இங்கே சேமித்து வைத்து கடனைப் பெற்று உங்களது உடனடி பணத்தேவையை நிவர்த்தி செய்து கொள்வதுடன் புதிய விலை கிடைக்கும் பொழுது நெல்லை விற்று பணமாக்கி கடனை மீளச் செலுத்திக் கொள்ளுங்கள் (மேற்படி செயற்பாட்டை தானிய களஞ்சியமும் வங்கியும் தாங்களே செய்தும் கொள்வார்கள்)
முக்கியமாக நிறை வாகனங்களுடன் அழைக்கப்படுவதனால் விவசாயிகள் ஏமாற்றப்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. களஞ்சியம் அமைந்திருக்கும் இடக்குறியினை அறிய கீழுள்ள இணைப்பினை சொடுக்கவும்.