அணு குண்டைவிட ஆயிரம் மடங்கு அழிவுசக்தியான ஹைட்ரஜன் குண்டை வெடித்து உலக நாடுகளின் பகையை சம்பாதித்துக் கொண்ட வடகொரியாவுக்கு எதிராக இன்று தென் கொரியா மீண்டும் தனது ஒலிபெருக்கி, பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அங்கு படைகள் இல்லாத பிரதேசத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் தென்கொரிய வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அதையடுத்து, வட கொரியாவுக்கு எதிராக வடகொரியா எல்லையில் அந்நாட்டுக்கு எதிராக தென்கொரியா, ஒலிபெருக்கி பிரசாரம் நடத்தியது.
வடகொரியாவுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தென்கொரியாவை குறிவைத்து வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்த, தென்கொரியாவும் பதிலடி கொடுத்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இரு தரப்பும் சமரச பேச்சு நடத்தினர். அதில் அப்போது உடன்பாடு எட்டப்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அணு குண்டைவிட ஆயிரம் மடங்கு அழிவுசக்தியான ஹைட்ரஜன் குண்டை வெடித்து பரிசோதித்த வடகொரியாவின் அடாவடித்தனத்தை தனது நாட்டுக்கு விடப்பட்ட சவாலாக கருதும் தென்கொரியா, உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் மூன்று மணியளவில் வடகொரியா எல்லையில் அந்நாட்டுக்கு எதிராக மீண்டும் ஒலிபெருக்கி பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
எல்லைப்பகுதியில் மிகப்பெரிய ஒலிபெருக்கிகளை கட்டிவைத்து, வடகொரிய அதிபரின் அணுஆயுத மோகம் அந்நாட்டு மக்களை கடுமையான பொருளாதார சீர்குலைவில் நிறுத்திவிடும் என்று அந்த ஒலிபெருக்கிகளின் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.