வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் கல்வி உள்ளிட்ட பொதுச் சேவைகளின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் வெடித்துள்ள பாரிய ஆர்ப்பாட்டங்கள் பெரும் கலவரமாகவும் கொள்ளைச் சம்பவங்களாகவும் உருவெடுத்துள்ள நிலையில், நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை ஆரம்பமான இந்தப் போராட்டங்கள் பாரிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் நீடித்ததுடன், வன்முறைகளின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொடர்புடைய செய்தி – பிரான்ஸில் வன்முறை: கட்டிடங்களுக்கு தீவைப்பு, கொள்ளைச் சம்பவங்கள்; 1,200க்கும் மேற்பட்டோர் கைது
நாட்டிலுள்ள சுமார் 110 இடங்களில் ஏறத்தாழ 5 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
எனினும், பாரிஸ், மார்சேய் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் முகமூடி மற்றும் கறுப்பு நிற ஆடைகளை அணிந்த வன்முறைக் குழுவினர் ஆடம்பரக் கடைகளின் கண்ணாடிகளை உடைத்துச் சூறையாடியதுடன், வாகனங்கள், கட்டடங்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் சைக்கிள்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
அத்துடன், பட்டாசுகளை வீசி பொலிஸார் மீது தாக்குதல்களையும் முன்னெடுத்துள்ளனர். இதற்குப் பதிலடியாகப் பொலிஸாரும் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், நாடு முழுவதும் சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, பாரிஸில் உள்ள பவுல்வர்ட் மெஜந்தா (Boulevard Magenta) பகுதி ஊடாகப் பேரணியாகச் சென்றுகொண்டிருந்த போராட்டக்காரர் ஒருவர் திடீரென மாரடைப்புக்கு உள்ளாகி மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எலிசே அரண்மனையிலிருந்து நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிலைமையை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளதுடன், தற்போதைய சம்பவங்கள் தொடர்பில் அனைவரும் கோபமும் அவமானமும் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், நாசவேலைகளில் ஈடுபட்டு வன்முறையைப் பரப்பியவர்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வன்முறைகளை எதனாலும் நியாயப்படுத்த முடியாது எனவும், இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிரான்சின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான மக்கள் குழப்ப நிலையைத் தொடர்ந்து, பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு இன்று திங்கட்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.