அமெரிக்கா ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேட்டோ அமைப்பானது அதன் பாதுகாப்புச் செலவை அதிகரிக்க முன்வந்துள்ளது.
நேட்டோ அமைப்பின் கூட்டணியின் தலைவர்கள் இதற்கு இணங்கியுள்ளனர்.
நெதர்லந்தின் தி ஹேக் நகரில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ஏகமனதாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2035ஆம் ஆண்டுக்குள் நேட்டோ நாடுகள் ஒவ்வொன்றும் அவற்றின் பொருளாதாரத்தில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்குச் செலவிட இணக்கம் தெரிவித்தன. அத்துடன், பாதுகாப்பு மிரட்டல்களுக்கு எதிராக நேட்டோ நாடுகள் ஒற்றுமையாக நிற்பதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்குங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டார். பல மாதங்களாகவே அது குறித்து டிரம்ப் நெருக்கடி கொடுத்துவந்தார்.
இதற்கு தற்போது நேட்டோ இணங்கியதால் டிரம்ப் மகிழ்ச்சியில் உள்ளார்.
நேட்டோ அமைப்பு
நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பானது, 1949ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஓர் இராணுவக் கூட்டணி ஆகும்.
இதன் தலைமையகம், பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஓர் கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி, டென்மார்க் மற்றும் சுவீடன் உள்ளிட்ட 30 ஐரோப்பிய நாடுகளையும் 2 வட அமெரிக்க நாடுகளையும் கொண்டு, 32 நாடுகளின் உறுப்புரிமையை நேட்டோ கொண்டுள்ளது.
