இலங்கையில் ஆண்டுதோறும் நுகரப்படும் பால் மற்றும் பால்சார் பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், உள்நாட்டு பால் உற்பத்தி இன்னும் நாட்டின் முழுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இதன் விளைவாக ஆண்டுதோறும் பல பில்லியன் ரூபாய் மதிப்பிலான பால் மா மற்றும் பால்சார் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதி செலவைக் குறைத்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு பால் உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் தேவையாகும். உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு முன்னர் உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை அனைவரும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
கால்நடை வளர்ப்பின் வெற்றிக்கு தீவன உற்பத்தியே அடித்தளம்
உணவுப் பாதுகாப்பு (Food Security) உணவுப் பாதுகாப்பு என்பது, “அனைத்து மக்களும் எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான போதுமான, பாதுகாப்பான, சத்தான மற்றும் மலிவான உணவை பெறும் நிலை ஆகும்”.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை. அமைப்பு (FAO) படி, உணவுப் பாதுகாப்பு நான்கு முக்கிய தூண்களைக் கொண்டது:
1)உணவு கிடைக்கும் தன்மை (Availability) – போதுமான அளவு உணவு உற்பத்தி மற்றும் விநியோகம்.
2)உணவைப் பெறும் திறன் (Access) – மக்களால் பொருளாதார ரீதியாக உணவை வாங்கவோ பெறவோ முடியுமான நிலை.
3)உணவின் சரியான பயன்பாடு (Utilization) – சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம் மற்றும் நல்ல ஊட்டச்சத்து.
4)நிலைத்தன்மை (Stability) – இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் அல்லது பிற காரணங்களால் உணவு கிடைப்பதில் தொடர்ச்சியான பாதிப்பு ஏற்படாத நிலை என்பவற்றை குறிக்கிறது .
அவ்வகையில், உள்நாட்டில் பற்றாக்குறையாக காணப்படுகின்ற பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உடனடியாக மாடுகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல. அந்த மாடுகளுக்கு ஆண்டு முழுவதும் தரமான, போதுமான தீவனத்தை வழங்கும் திறன் இருக்க வேண்டும். தரமான தீவன உற்பத்தி இல்லாமல் நிலையான பால் உற்பத்தி சாத்தியமில்லை.
கால்நடை அறிவியலின் அடிப்படை உண்மை என்னவென்றால், ஒரு பசுவின் பால் உற்பத்தியில் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை அதன் தீவனத்தின் தரமும், அளவும் தீர்மானிக்கின்றன.மேலும், பசுவின் மரபியல் திறன் முழுமையாக வெளிப்படுவதற்கு போதுமான ஊட்டச்சத்து அவசியம். தீவனக் குறைபாடு ஏற்பட்டால் பால் உற்பத்தி மட்டுமல்லாமல், இனப்பெருக்கம், உடல்நலம் மற்றும் பண்ணையின் இலாபமும் பாதிக்கப்படும்.
ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு பால் பண்ணையின் மொத்த உற்பத்திச் செலவில் 50 முதல் 70 சதவீதம் வரை தீவனச் செலவாகவே அமைகிறது. எனவே, தீவனத்தை வெளியிலிருந்து வாங்குவதற்குப் பதிலாக பண்ணையிலேயே உற்பத்தி செய்தால், உற்பத்திச் செலவை கணிசமாகக் குறைத்து இலாபத்தை அதிகரிக்க முடியும்.
கிளிநொச்சி மாவட்டம் பரந்த விவசாய நிலங்கள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற காலநிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, இம்மாவட்டத்தை வட மாகாணத்தின் முன்னணி பால் உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஆனால், இதற்கு முதன்மையான நிபந்தனை தரமான தீவன உற்பத்தியாகும்.
ஒரு வளர்ந்த பால் பசுவிற்கு தினமும் சுமார் 40–60 கிலோ பசுந்தீவனம், 4–6 கிலோ உலர் தீவனம் மற்றும் தேவைக்கேற்ப அடர்தீவனம் வழங்கப்பட வேண்டும். இந்த தேவையை சந்தையில் வாங்கி பூர்த்தி செய்வது சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களுக்கு மிகுந்த செலவாகும்.
இதனால் ஒவ்வொரு பண்ணையாளரும் குறைந்தபட்சம் தமது பண்ணைக்குத் தேவையான தீவனத்தின் பெரும்பகுதியைத் தாங்களே உற்பத்தி செய்யும் நோக்கில் செயல்பட வேண்டும். சுப்பர் நேப்பியர், ரெட் நேப்பியர் சுகர் கிறாஸ்,மக்காச்சளம், CO6 ரக இனங்கள் மற்றும் பிற உயர்தர தீவனப் புற்களை அறிவியல் முறையில் வளர்ப்பதன் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் ஆண்டிற்கு பல நூறு டன் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். மழைக்காலத்தில் கிடைக்கும் பசுந்தீவனத்தை சைலேஜ் வடிவில் பரல்களில் சேமித்து வைத்தால், வறட்சி காலங்களிலும் பால் உற்பத்தி பாதிக்கப்படாமல் தொடர முடியும்.
துரதிர்ஷ்டவசமாக, பல விவசாயிகள் மாடுகளை வாங்குவதில் அதிக முதலீடு செய்கிறார்கள். ஆனால், அந்த மாடுகளுக்கான தீவன உற்பத்திக்குத் தேவையான நிலம், மற்றும் நீர்ப்பாசன வசதிகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அதிக விலைக்கு தீவனம் வாங்க வேண்டிய நிலை உருவாகிறது; அதன் விளைவாக இலாபம் குறைகிறது.
எனவே, புல் வளர்ப்பை ஒரு தனி தொழிலாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்தித் துறையாகவும் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.
தற்போது மாடு வளர்ப்புக்காக வழங்கப்படும் பல்வேறு மானியங்கள், குறைந்த வட்டி கடன் திட்டங்கள், உபகரண உதவிகள் மற்றும் அரச ஆதரவுகள் போலவே, தீவன உற்பத்திக்கும் விரிவான உதவிகள் வழங்கப்பட வேண்டும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் “இலங்கை பால் பண்ணை மையம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி திட்டம் ஊடாக வழங்க முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். குறிப்பாக: தீவனப் புல் உற்பத்திக்கான மானியம்.
குறைந்த வட்டி கடன் திட்டங்கள்.
புல் விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்குதல்.
நீர்ப்பாசன அமைப்புகளுக்கான நிதி உதவி ( தூவல், சொட்டு நீர்ப்பாசனம்)
புல் வெட்டும் இயந்திரங்கள், மற்றும் சைலேஜ் தயாரிப்பு இயந்திரங்களுக்கு மானியம், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் தொடர்ச்சியான ஆலோசனை.
இவ்வாறான திட்டங்கள் முக்கியமானதாகும் இதனால் பால் உற்பத்தி அதிகரிப்பு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு புதிய தொழில்முயற்சி வாய்ப்புகளும் உருவாகும். புல் உற்பத்தி, சைலேஜ் உற்பத்தி, தீவன விற்பனை போன்ற புதிய தொழில்களும் வளர்ச்சி பெறும்.
எதிர்காலத்தில் “ஒவ்வொரு பால் பண்ணைக்கும் ஒரு பசுந்தீவனப் பண்ணை” என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், உற்பத்திச் செலவைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும்.
தரமான தீவனம் இல்லாமல் தரமான பால் உற்பத்தி சாத்தியமில்லை. எனவே, புல் வளர்ப்பை ஊக்குவிப்பதே இலங்கையின் பால் உற்பத்தி புரட்சிக்கான முதல் படியாக அமையும். கிளிநொச்சி மாவட்டமும் குறிப்பாக கண்டாவளை பிரதேசமும் இந்த மாற்றத்திற்கு முன்னோடியாக மாறக்கூடிய அனைத்து வளங்களையும் கொண்டுள்ளது. அரசாங்கம், தனியார் துறை மற்றும் விவசாயிகள் இணைந்து செயற்பட்டால், கிளிநொச்சியை இலங்கையின் முன்னணி பால் உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றாக உருவாக்குவது சாத்தியமே.
கட்டுரையாசிரியர்: மா. சுவேந்திரன்,
இளம் பட்டதாரி மற்றும் சுயாதீன தொழில் முயற்சியாளர்
B.A. (Hons) Special in Economics, University of Jaffna