தத்துவம் கற்பார்; மேதைத்
தரமது புரியார்; வாழ்வை
வித்துவம் என்பார்; வீணாய்க்
விசும்பதை அளப்பார்; காலை
ஒத்தடம் கொடுத்தல் போலே
ஒப்பிலாப் பிரம்ம ஞானி..!
எத்திசை ஒளியும் ஏற்றி
எங்களின் குரலாய் நின்றாய்!
நூல்களை நுழைந்து கற்று;
நுண்மதி தேடிப் பெற்று;
கால்களால் தேசம் எல்லாம்
கனிவுடன் நடந்து சென்று;
வேல்களே சொல்லாய் ஏவி;
வெற்றிகள் பெற்றுத் தந்து;
கோல்களே பேனா என்று
கொள்கைகள் எழுதி வைத்தாய்!
விடுதலை நெருப்பை மூட்ட
வித்தையுன் அறிவைத் தந்தாய்!
கடுகதி யாக நல்ல
கட்டுரை தீட்டித் தந்தாய்!
சடுதியில் சூழ்ச்சி மாயும்
சங்கரன் நுதலைக் கொண்டாய்!
படுத்தனை… நோயும் உண்ண…
படுக்குமா நிலமும் என்றாய்!
எத்தனை மேடை கண்டாய்!
எதிர்வரும் பேச்சு வார்த்தை
அத்தனை யாவும் ஆளும்
ஆழ்மதி நுட்பம் கொண்டாய்!
சத்தியம் ஈகை வெல்லும்
சங்கதி நம்பி நின்றாய்!
வித்தையில் காலை ஊன்றி
விடுதலைக் காக வாழ்ந்தாய்!
ஆங்கிலம் நாவில் ஆட…
அருந்தமிழ் சேர்ந்து ஆட…
பாங்கெனப் படையும் போற்ற
பாரெலாம் உலவி வந்தாய்!
ஓங்குயர் லண்டன் மண்ணில்
ஒளிவடி வாகிப் போனாய்!
மாங்குளம் முதலாய் எங்கள்
மண்ணெலாம் போற்றும் உன்னை…!
லஹரி