இங்கிலாந்தின் குளோஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள ஆர்.ஏ.எப். பெயர்போர்ட் (RAF Fairford) இராணுவ தளத்திலிருந்து தனது அனைத்து குண்டுவீச்சு விமானங்களையும் அமெரிக்கா முற்றாக மீளப்பெற்றுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்தே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தளத்தில் நிலைகொண்டிருந்த சுமார் ஒரு டஜன் பி-1 (B-1) ரக குண்டுவீச்சு விமானங்கள், அமெரிக்காவிலுள்ள அவற்றின் சொந்த தளங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானங்களை மீளப்பெற்றமைக்கான நேரடிக் காரணத்தை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியிடாதபோதிலும், கடந்த செப்டெம்பர் 27 அன்று விமானப்படைத் தளத்துக்கு அருகே சந்தேகத்துக்கிடமான மூன்று வாகனங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த சம்பவத்தைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனின் இந்த தீர்மானம் குளோஸ்டர்ஷையர் தளத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியிலேயே எடுக்கப்பட்டது என்பதை இங்கிலாந்து அரச வட்டாரங்கள் மறுக்கவில்லை. இது அரசியல் ரீதியானதல்லாது, இராணுவ மட்டத்திலான ஒரு செயல்பாட்டுத் தீர்மானம் எனவும், இது அமெரிக்க இராணுவத்தால் இங்கிலாந்து தரப்புக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சு இது குறித்து எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.
விமான கண்காணிப்பு இணையத்தளங்களின் தரவுகளின்படி, பி-1 ரக விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை பெயர்போர்ட் தளத்திலிருந்து வெளியேறியமை பதிவாகியுள்ளது.
அமெரிக்க விமானப்படையினால் இயக்கப்படும் இந்த தளத்தை நோக்கி வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, 23 முதல் 25 வயதுக்குட்பட்ட இலண்டனைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜைகள் ஐவர், அதிகாலை வேளையில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர்.
வெடிபொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழும், பின்னர் பயங்கரவாதச் செயலைத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்ட அவர்கள், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, 25 வயதுடைய இங்கிலாந்து-ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட ஆறாவது நபர் வியாழக்கிழமை இலண்டனில் கைது செய்யப்பட்டு, அவரும் சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தில் ஈரானின் தலையீடு இருப்பதற்கான வலுவான அறிகுறிகள் காணப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் சுட்டிக்காட்டிய போதிலும், மேலதிக விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
அதேவேளை ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை தமக்கு ஆச்சரியமளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.