அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 7 மாகாணங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குடியரசுக் கட்சியில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும் வெற்றி பெற்றனர்.
அலபாமா, ஆர்கன்ஸாஸ், ஜார்ஜியா, மாஸசுùஸட்ஸ், டென்னஸீ, வெர்மான்ட், வர்ஜீனியா ஆகிய 7 மாகாணங்களில் ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்புகளில் அவர்கள் வெற்றியடைந்துள்ளதால், அதிபர் தேர்தலில் இருவரும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியிருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அதிபர் தேர்தலில் தங்களது கட்சி சார்பிலான வேட்பாளாரகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்த வெற்றிகள் போதாது என டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவருமே கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி (68), கடந்த 2008-ஆம் ஆண்டு வேட்பாளர் தேர்வுப் போட்டியில் தற்போதைய அதிபர் ஒபாமாவிடம் தோல்வியடைந்த வர்ஜீனியா மாகாணத்தில், இந்த முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.