வீட்டிலும், அலுவலகத்திலும் வளர்க்கப்படும் செடிகள் அறைகளுக்கு அழகை மட்டும் கொடுக்கவில்லை. அறையில் உள்ள காற்றை தூய்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
அழகு பனைகள்
அறைகளின் உள்ளே பலவிதமான செடிகளையும் வளர்க்கமுடியும். என்றாலும் சில செடிகளை வளர்ப்பது அறையைத் தூய்மையாக வைத்திருக்க உதவும். அவற்றுள் முதலிடத்தில் இருப்பது பனைக்குடும்பங்களைச் சேர்ந்த செடிகள். இவற்றின் இலையமைப்பு வலுவாக இருப்பதால் எளிதில் வாடாமல் எப்போதும் பளிச்சென்று இருக்கும். மேலும் பனைச்செடிகளானது கார்பன் மோனாக்ஸைடு, பென்சீன் மற்றும் பார்மால்டிகைடு ஆகியவற்றை காற்றிலிருந்து கவர்ந்து இழுத்து அறையின் காற்றை சுத்தமாக வைத்திருக்கும்.
பாம்பு செடிகள்
காற்றில் உள்ள பார்மால்டிகைடை நீக்குவதில் பெரும்பங்கு வகிப்பவை பாம்பு செடிகள். இவை பாம்பின் தோலைப் போல தோற்றம் அளிப்பதால் பாம்புச்செடிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் செடிகள் வளர்வதற்கு கொஞ்சம் வெளிச்சமும், நிலையான ஈரப்பதமும் தேவை.
சிலந்தி செடிகள்
நச்சுத்தன்மை உள்ள வாயுக்களை நீக்குவதில் பாம்புச் செடிகளை போலவே சிலந்தி செடிகளும் முக்கிய பங்காற்றுகின்றன. இவை சிலந்தியைப் போல வடிவம் கொண்டிருப்பதால் இந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவற்றின் சின்னஞ்சிறிய வெள்ளை பூக்கள் அழகு மிகுந்தவை. இச்செடிகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுவதில்லை. எளிதில் வாடிப்போகவும் செய்யாது.
ஆர்க்கிட்
புதிய வீடுகளில் அல்லது புதுப்பிக்கப்பட்ட வீடுகளில் குடியேறுபவர்கள் அறைகளில் ஆர்க்கிட் செடிகளை வளர்ப்பது மிகவும் பயனளிக்கும். பெயிண்டுகளில் இருந்து காற்றில் கலக்கும் நச்சு வாயுக்களை ஆர்க்கிட் செடிகள் அகற்றும். இவை இரவு நேரத்திலும் கார்பன் மோனாக்ஸைடை உள்ளே இழுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. எனவே படுக்கையறையிலும் ஆர்க்கிட் செடிகளை வளர்க்கலாம்.
நன்றி : தினத்தந்தி