செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

2 minutes read

வயது மூப்பின் காரணமாக நேற்று மைசூரில் அவரது இல்லத்தில் காலமான பிரபல இந்திய திரை இசை பாடகி எஸ். ஜானகிக்கு இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எண்பத்தி எட்டு வயதான திரை இசை பின்னணி பாடகி எஸ். ஜானகி நேற்று (11) சனிக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடல் இன்று காலையில் இருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரசிகர்களும், இசைக் கலைஞர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் எஸ். ஜானகியின் மறைவு குறித்து இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில்…

” புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவின் மூலம் இந்தியா ஒரு இசை சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல் வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசை பயணத்தில்.. இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி ,பெங்காலி உள்ளிட்ட இருபது இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பதிவு செய்துள்ளார். காலத்தால் அழியாத அவரது இசை என்றும் போற்றத்தக்கதாக திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எஸ். ஜானகியின் மறைவு குறித்து வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில்…, ” சிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு இசை மற்றும் கலாச்சார உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இணையற்ற நேர்த்தியுடனும், பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் அவரது குரல் வெளிப்படுத்தியது. இனிவரும் காலங்களிலும் அவரது இனிய பாடல்கள் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும். துயரமான இந்த வேலையில் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இசை சமூகம் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

ஓம் சாந்தி!” என பதிவிட்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்..,

” இந்திய திரைப்பட இசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறையினரின் மனதை வென்ற புகழ்பெற்ற பின்னணி பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியதன் மூலம் இசை உலகில் அவர் அழியாத முத்திரையை பதித்துள்ளார். பல தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட எண்ணற்ற உயரிய விருதுகளை வென்ற அவர் ,தனது இனிமையான குரல்… உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசையின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு …ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், திரைப்படத்துறையினர் ,இசை கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே திருமதி எஸ். ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார் என்பதும் அவருடைய மறைவிற்குப் பிறகு புத்திர சோகத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் சர்வதேச மொழிகளிலும் கிட்டத்தட்ட 40,000 பாடல்களை பாடியிருந்தாலும்.. எளிமையாக காட்சியளிக்க கூடிய எஸ். ஜானகி அறிமுகமற்றவர்களிடம் கனிவாக பழகுவார் என அவரது அன்பை பெற்ற சாதாரண சாமானிய மக்கள் பகிர்ந்து கொள்ளும் போது கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்க்கிறது.

தமிழ் திரை உலகில் அண்மையில் தான் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவையும் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜையும் இழந்து அதில் இருந்து மீள முடியாமல் தவித்தோம். தற்போது ‘கான குயில்’ எஸ். ஜானகியையும் இழந்துவிட்டோம் எனும் போது ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதுதான் நிஜம். இருப்பினும் அந்த ஆன்மா சாந்தியடைய அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.