சிரியா நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இஸ்லாமிய அரசை அமைத்திருப்பதாக அறிவித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறார்கள்.
மதத்தின் பெயரால் அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றும் அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக குண்டு வெடிப்புகளை நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் கால்ஊன்ற தீவிர முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இதையடுத்து வங்கதேசத்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மூலம் இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதி திட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பத்திரிகையான “தபீக்,” எனும் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பத்திரிகையில் வங்கதேச ஐ.எஸ். தீவிரவாத தலைவன் சயக் அபு இப்ராகிம் அல்–ஹனீப் என்பவன் பேட்டி அளித்துள்ளான். அதில் அவன், இந்தியாவில் கொரில்லா பாணியில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்” என்று கூறியுள்ளான்.
இந்தியாவில் ஷரீயத் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக கூறியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்த சட்ட அடிப்படையில் இந்தியர்களை இந்தியாவை விட்டு விரட்டுவோம் என்றும் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் இந்தியாவை கைப்பற்றுவதே தங்களது லட்சியமாகும் என்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பத்திரிகையில் கூறி உள்ளனர்.
இந்தியாவில் உள்ள முஜாகிதீன் தீவிரவாதிகள், சிமி அமைப்பினர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் உதவியுடன் இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்துவதன் மூலம் தங்களது திட்டத்தை நிறைவேற்றப்போவதாக அல்ஹனீப் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நாடெங்கும் உள்ள முஜாகிதீன் ஆதரவாளர்களை உளவுத் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இது தவிர ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் சுமார் 150 பேர் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்