வட கொரியா வெள்ளிக்கிழமை நிகழ்த்திய ஏவுகணைப் பரிசோதனைக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.
தோல்வியில் முடிந்தாலும் அந்தப் பரிசோதனை தாங்கள் விதித்துள்ள தடைகளுக்கு எதிரானது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வட கொரியா மேம்படுத்தக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
அந்தத் தீர்மானங்களை மீறும் வகையில், வட கொரியா ஏவுகணைப் பரிசோதனையை நடத்தியுள்ளது.
அந்தப் பரிசோதனை தோல்வியடைந்தாலும், ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிரான அந்தப் பரிசோனை கண்டனத்துக்குரியது.
வட கொரியாவின் இந்த தடை மீறல்களுக்கு எதிராக மேலும் கடுமையான நவடிக்கைகளை எடுக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தயாராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் தடையையும் மீறி ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை, ராக்கெட் பரிசோதனை ஆகியவற்றை வட கொரியா அண்மையில் மேற்கொண்டது. அதையடுத்து, அந்த நாட்டுக்கு எதிராக பாதுகாப்புக் கவுன்சில் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு குறுகிய தொலைவு ஏவுகணைப் பரிசோதனைகளில் ஈடுபட்டு வந்த வட கொரியா, முன்னாள் அதிபரின் பிறந்த நாளை ஒட்டி வெள்ளிக்கிழமை மேலும் ஒரு ஏவுகணைப் பரிசோதனை நிகழ்த்தியது. ஆனால் விண்ணில் செலுத்திய சில விநாடிகளில் ஏவுகணை ரேடாரின் கண்காணிப்பிலிருந்து மறைந்ததாகவும், அந்த ஏவுகணை நடுவானில் வெடித்துச் சிதறியிருக்கலாம் எனவும் தென்கொரியப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.