கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் போர்ப் பயிற்சிகளை நிறுத்தினால், தங்களது ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்தத் தயார் என்று தென் கொரியா கூறிய யோசனையை அமெரிக்கா நிராகரித்தது.
அமெரிக்க ராணுவமும் தென் கொரிய ராணுவமும் இணைந்து ஆண்டுதோறும் போர்ப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதில் தரைப் படை, கடற்படை, விமானப் படை ஆகிய மூன்று பிரிவுகளுமே பங்கேற்கின்றன.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் வட கொரியா அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபட்டது.
இதையடுத்து, அந்த நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது.
ஆயினும் அதனைப் பொருட்படுத்தாமல், மேலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை விண்ணில் ஏவிப் பரிசோதனை செய்தது வட கொரியா.
கடைசியாக, நீர்மூழ்கியிலிருந்து ஏவுகணை செலுத்தும் பரிசோதனையை கடந்த சனிக்கிழமை மேற்கொண்டது.
இந்தப் பரிசோதனை மகத்தான வெற்றியடைந்ததாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் அறிவித்தார்.
நீர்மூழ்கி மூலமாக எதிரி நாடுகளை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் திறனை தாங்கள் பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.
வட கொரியாவின் இந்த நடவடிக்கை அந்தப் பிராந்தியத்தில் ஏற்கெனவே உள்ள பதற்ற நிலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இதனிடையே, அணு ஆயுதம் உள்ளிட்ட போர்ப் பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்தினால், வட கொரியா தனது ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்திக் கொள்ளத் தயார் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரீஸþ யோங் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த யோசனையை அமெரிக்கா நிராகரித்தது.