தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து திங்கள்கிழமை முதல் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெனிசூலாவின் மின் தேவையை ஈடு செய்வதில் குரி அணைக்கட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. தற்போது, அங்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைக் காட்டிலும் குறைந்ததையடுத்து,வெனிசூலாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், அணைக்கட்டில் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும் அதிபர் நிகோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசூலா அரசு நாடு முழுவதும் மின் வெட்டு அறிவிப்பை வெளியிட்டது.
கடந்த சில வாரங்களாக தொழிற்சாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்தும், புதிதாக தேசிய விடுமுறை தினங்களை அறிவித்தும் மின் சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டது. வீடுகளில், கூந்தல் உலர்த்தும் கருவி மற்றும் இஸ்திரி பெட்டி போன்ற மின் சாதன உபகரணங்களின் பயன்பாட்டைக் கூட தவிர்க்கும்படி பொதுமக்களை வெனிசூலா அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில், மொத்தம் உள்ள 24 மாகாணங்களில், 18 மாகாணங்களில் மின் வெட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. தினசரி 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. தலைநகர் காரகஸும் இந்த மின் வெட்டுக்குத் தப்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரோ அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
7