முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் இல்லத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஸ்கேன் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட ஒரு கோடி ரூபாயை மோசடியாகப் பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஊழல் மற்றும் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் ஷிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரை சந்தேகநபர்களாகப் பெயரிட்டு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை மேற்கொண்டுள்ளனர்.