மறந்திட முடியாத
மாவீரர் நினைவுகள்
மனங்களில் மீண்டு
மண்வாசனை தந்தன.
தாயக மண்ணே!….
தாகம் தீரவில்லை.
தரணி விழுந்து உன்னில்
தாவிப் புரள வேண்டும்.
கார்த்திகை பிறந்ததும்
காவலர் நினைவுகளில்
காலங்கள் கடந்தேகியும்
காண்போமவரை மனங்களில்.
காந்தாள் செழித்து
கார்கால மேகங்களோடு
காடுறைந்து நாடு மீட்கும்
காலத்தார் கதைகள் பேசும்.
மாவீரர் துயிலுமில்லம்
மானத்தோடு வாழுமில்லம்.
மானமா வீரர்கள் என்றும்
மண்ணுறங்கும் பேரில்லம்.
மனத்தால் மறந்திட
மகத்தான அவர்கள்
மாண்பு தடுக்கும்.
மனம் நிறைந்து பூசிப்போம்.
தடுத்திட வெறுத்திடும்
தடுப்போரை தடுத்திட
தரணியில் விதித்திடும்
தத்துவங்கள் வந்து காத்திட.
உலகம் வியந்து நோக்க
உயிருக்குயிராய் வாழ்ந்த
உத்தமர் நினைவில் நாம்
உறைந்து போகிறோம்.
காந்தாள் மலர்ந்திட
கார்கால மழை பொழிந்திட
கரிகாலன் வழியில் நடந்திட
காத்திரம் தந்தவர் நினைவோடு.
பாத்திரம் ஏற்று நாம்
பாரில் படைத்திடுவோம்.
பாடல்கள் பல சேர்த்து
பாமாலை சூடிடுவோம்.
நதுநசி