இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நாசகார வேலைகளைத் தடுப்பது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாம், ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் உடன் பெர்லினில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் கலப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே, பிரதமர் பேர்ன்ஹாமின் இந்த கன்னி ஜெர்மனிய விஜயத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக அமையும் என டவுனிங் ஸ்ட்ரீட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் விமான நிலையத்தை நோக்கி ரஷ்யா வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை (Drone) ஏவியதாக ஜெர்மன் குற்றஞ்சாட்டியிருந்தமை உட்பட, அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக இரு நாட்டு உளவுத்துறையினரும் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளடங்கலாக, இவ்வருடத்தின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான தெரிவுகளை முன்வைக்க விரும்புவதாக தொழிற் கட்சியின் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் தெரிவித்திருந்த பின்னணியில், இந்த பெர்லின் சந்திப்பு இடம்பெறுகின்றது.
எதிர்காலத்தில் வாக்கெடுப்பு நடத்துவது என்பது இங்கிலாந்தின் தீர்மானம் என்றாலும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வலுவான உறவை பெர்லின் ஆதரிப்பதாக ஜேர்மன் அரசாங்க பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.