செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பயங்கரவாத அமைப்புகளுக்கு சைபர் தொழில்நுட்ப ஆதரவு வழங்கிய இங்கிலாந்து இளைஞனுக்கு சிறை

பயங்கரவாத அமைப்புகளுக்கு சைபர் தொழில்நுட்ப ஆதரவு வழங்கிய இங்கிலாந்து இளைஞனுக்கு சிறை

1 minutes read

அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு சைபர் பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய குற்றச்சாட்டில், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பதின்ம வயது இளைஞன் ஒருவருக்கு நான்கு வருடங்களும் இரண்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் இல்போர்ட் பகுதியைச் சேர்ந்த யூசுப் ஷா என்பவரே இவ்வாறு கிங்ஸ்டன் கிரவுண் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழ் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட போது, இவருக்கு 16 வயதாக இருந்ததுடன், தற்போது இவருக்கு 18 வயதாகிறது.

இவரது கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதித்த புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுப்பது தொடர்பான வழிகாட்டல்களைக் கொண்ட அல் கொய்தா அமைப்பின் இணைய இதழை இவர் வாசித்துள்ளதையும், டெலிகிராம் செயலி வாயிலாகப் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்கியதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் வெடிபொருட்களைத் தயாரிப்பது மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான இரகசிய ஆவணங்களையும் இவர் பதிவிறக்கம் செய்து வைத்திருந்துள்ளார்.

குறிப்பாக, அல் கொய்தா அமைப்புக்குத் தடயங்களை மறைத்து இரகசியமாக கிரிப்டோகரன்சி ஊடாக நிதி வழங்குவது எவ்வாறு என்பது தொடர்பில் குறித்த இளைஞன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும் 2024 மார்ச் மாதத்தில், தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் கோரிக்கைக்கு அமைய, சைபர் பாதுகாப்பு மற்றும் கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் குறித்த விரிவான கையேடு ஒன்றைத் தயாரித்து அனுப்பியமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத ஆவணங்களைச் சேகரித்தமை தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள், பயங்கரவாத நிதி திரட்டலுக்கு ஆதரவளித்தமை மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்களை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.