இங்கிலாந்தின் நலத்திட்டச் செலவுகளைச் சாத்தியமானளவு விரைவாகக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ஆண்டி பர்ஹாம், எனினும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் எவ்வித உறுதிமொழியையும் வழங்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரமாக திட்டமிடப்படாத நிதி வெட்டுக்களை மேற்கொள்வது மக்களைப் பாரதூரமான நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடும் எனவும், அத்தகைய அணுகுமுறை ஏனைய வழிகளில் அரசாங்க நிதியை மேலதிகமாக விரயமாக்குவதற்கே வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக மக்களை நிலையான வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்துவதே தங்களின் பிரதான இலக்கு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நாட்டின் நலத்திட்டச் செலவினங்கள் குறைக்கப்படும் என அமைச்சர்கள் கூறியதாக வெளியான தகவல்களைப் பிரதமர் அலுவலகமும் திறைசேரியும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன. இது தொடர்பில் குறிப்பிட்ட இலக்கோ அல்லது காலக்கெடுவோ எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் கல்வியோ வேலைவாய்ப்போ இல்லாத இளைஞர் சமூகம் தொடர்பான இரண்டு முக்கிய மீளாய்வறிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட பின்னரே, அரசாங்கத்தின் விரிவான திட்டங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.