தெலுங்கு திரையுகில் முன்னணி நடிகரான மகேஷ்பாபு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் புர்ரபாளையம் என்ற கிராமத்தை தத்து எடுத்து உள்ளார். இது அவரது தந்தையும், நடிகருமான கிருஷ்ணா பிறந்த ஊராகும். இந்த கிராமத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வரும் மகேஷ்பாபு, சாலை வசதி, மருத்துவ வசதி, கல்வி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தத்து எடுத்த கிராமத்துக்கு வந்த மகேஷ்பாபு, அங்கு நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்டார். மகேஷ்பாபுவின் தந்தை வழி பாட்டி நாகரத்தினம்மா ஒரு நிலத்தை நன்கொடையாக வழங்கி இருந்தார். அந்த இடத்தில் மகேஷ்பாபு பள்ளிக்கூடம் ஒன்றை கட்டியிருந்தார். அதனை திறந்து வைத்து, அங்கன்வாடி பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
திறந்த ஜீப்பில் சென்று கிராமத்தை சுற்றிப் பார்த்த மகேஷ்பாபுவை காண கிராம மக்கள் திரண்டு விட்டனர். அதோடு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவரது ரசிகர்களும் வந்து இருந்தனர். மகேஷ்பாபுவை பார்த்து அவர்கள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுமார் 4 மணி நேரம் கிராமத்தில் தங்கி இருந்தார் மகேஷ்பாபு.
பின்னர் அங்குள்ள மக்கள் மத்தியில் மகேஷ்பாபு பேசும்போது:– இது எனது தந்தை பிறந்த கிராமம். இந்த கிராமத்தை தத்து எடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏதோ கிராமத்துக்கு வந்தேன், வண்ணம் பூசி சென்றேன் என்று இல்லாமல் இந்த கிராமத்துக்கு அடிக்கடி வந்து செல்வேன். கிராம மக்களிடம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது லட்சியம்.