செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

யாழ்ப்பாணத்தில் இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

1 minutes read

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினரிடையே மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்திய –இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் கூட்டு சைக்கிள் பயணமான ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ இன் இலங்கைக் கட்ட நிறைவு நிகழ்வு இன்று (22) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் அதிகாரிகள், படையினர் மற்றும் பயணத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இலங்கையின் 20ஆவது தேசிய மாணவர் படையணிப் பிரிவு – யாழ்ப்பாணத்தினால் இந்த நிறைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘மைத்திரி சேது’ என்பது நட்புறவுப் பாலம் எனப் பொருள்படும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாறு, கலாசாரம், மரபுகள் மற்றும் மக்களிடையிலான நெருக்கமான உறவுகளை இப்பயணம் அடையாளப்படுத்துவதாக ஆளுநர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புவியியல் அண்மையைத் தாண்டி, பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையிலான நீண்டகாலப் பிணைப்புகளால் வலுப்பெற்றுள்ளது என்றார்.

இத்தகைய பயணங்கள் நாடுகளுக்கிடையிலான நட்புறவை இராஜதந்திர உறவுகள் ஊடாக மாத்திரமன்றி, மக்களிடையிலான நேரடித் தொடர்புகள், ஒன்றிணைந்த அனுபவங்கள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஊடாகவும் வலுப்படுத்துகின்றன.

குறிப்பாக, இளைய தலைமுறையினரிடையே நட்பு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு இம்முயற்சி சிறந்த தளமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

தேசிய மாணவர் படையணி இளைஞர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம், தேசப்பற்று, குழுவாகச் செயற்படும் பண்பு, பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆளுநர் பாராட்டினார். இத்தகைய பண்புகள் தனிநபர்களின் வளர்ச்சிக்கு மாத்திரமன்றி, அமைதியான, பொறுப்புமிக்க மற்றும் முன்னேற்றகரமான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமானவை என்றார்.

இந்தியா மற்றும் இலங்கையின் இளைஞர்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் ஆழப்படுத்தும் இம்முயற்சியை வடக்கு மாகாணம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்காலத்திலும் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, இருநாட்டு இளைஞர்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும் இணைந்து செயற்படுவதற்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

இப்பயணத்தைச் சாத்தியமாக்குவதற்குப் பங்களித்த இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையணிகள், ஏற்பாட்டாளர்கள், அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் ஆளுநர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்ததுடன், பங்கேற்ற மாணவர்களின் பயணம் வெற்றியடையவும், அவர்களிடையே நீடித்த நட்புறவு உருவாகவும் வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் பிரதிநிதிகள், சிரேஷ;ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர் படையணியினர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.