பெண்களுக்கு சினிமா துறை பாதுகாப்பான இடம். எனவே, அந்தத் துறைக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும் என, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
திருச்சி அனைத்துப் பெண்கள் சங்கங்கள், இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய உலக மகளிர் தின விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியதாவது:
பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு நம்முடைய கலாசாரத்தை கற்றுத் தர வேண்டும். இன்றைய நிலையில் பெரியவர்களிடம் குழந்தைகள் அதிகம் பேசுவதில்லை. பலவற்றை இந்த இளைய சமுதாயம் இழந்து வருகிறது. கலாசாரத்தை மறந்து விட்டோம், தொலைத்தும் விட்டோம்.
பெண்ணை யார் அவமதித்தாலும் துணிந்து எதிர்த்து போராடுங்கள். கலாசாரம், சுயமரியாதை, கௌரவம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்காமல் ஆண்களோடு போட்டி போட்டு சாதித்துக் காட்ட வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் போதே ஆண், பெண் குழந்தையிடம் வேறுபாட்டை காட்டி வளர்க்க ஆரம்பித்துவிடுகிறோம். அது தொடக்கத்திலேயே பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. இரு குழந்தைகளையுமே சமமாக வளர்க்கத் தொடங்குங்கள் என்றார்.
முன்னதாக, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், மகப்பேறு மருத்துவர் டி. ரமணிதேவி, காந்தி கிராமத்தைச் சேர்ந்த எம். லட்சுமி ஆகியோருக்கு சிறப்புப் பணிக்காக விருதுகள் வழங்கப்பட்டன.