தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் 1970, மற்றும் 1980–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரீவித்யா. இவரது ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். 1976–ல் ஜார்ஜ் தாமஸ் என்ற உதவி இயக்குனரை ஸ்ரீவித்யா மணந்தார். பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1980–ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பின்னர் ஸ்ரீவித்யா சென்னையை விட்டு திருவனந்தபுரத்துக்கு குடிபெயர்ந்து அங்கேயே தங்கினார். சம்பாதித்த பணத்தில் நிறைய சொத்துக்கள் வாங்கி போட்டு இருந்தார். திருவனந்தபுரத்தில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளன.
2006–ல் ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். சாவதற்கு முன் தனது சொத்துக்களை அறக்கட்டளையாக்கி ஏழைகளுக்கு உதவியும், நடன பள்ளி தொடங்கவும் எழுதி வைத்தார். அதற்கு பொறுப்பாளராக மலையாள நடிகர் கணேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
ஆனால் உயில்படி சொத்துக்கள் பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டியிடம் ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கர்ராமன் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பால் மீனா தலைமையில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். நடிகர் கணேஷ்குமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கணேஷ்குமார் கைதாவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.