சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் காத்திருக்கும் படம் ‘வாலு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. தற்போது கடைசியாக ஜூலை 17-ந் தேதி இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் ஒரேயொரு பாடல் மட்டும் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது, இதற்கான படப்பிடிப்பில் படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். ‘தாறுமாறு’ என்று தொடங்கும் இந்த பாடலுக்கு ‘மானடா மயிலாட’ புகழ் சாண்டி நடனம் அமைக்கிறார்.
இந்த பாட்டில் சிம்பு, எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் ஆகியோர் கெட்டப்பில் வந்து நடனமாடுகிறாராம். சினிமாவில் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் டாப் நடிகராக இருந்தார். அதன்பிறகு ரஜினி அந்த இடத்தை பிடித்தார். தற்போது அஜித்துக்கு அந்த இடம் கிடைத்துள்ளது. இவர்களுக்கு பிறகு சிம்புதான் அந்த இடத்தை பிடிப்பார் என்பது போல் அப்பாட்டு அமைந்துள்ளதாம். அதற்கேற்றார் போல் சிம்புவும் நடனமாடி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பாடலுடன் சிம்புவின் ‘வாலு’ வருகிற ஜூலை 17-ந் தேதி உற்சாகமுடன் வெளிவருகிறது. இதற்கான பணிகளில் சிம்பு இரவு-பகல் பாராது கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.