திருமணம் ஆனதால் சினிமாவை விட்டு தற்போது விலகியுள்ளதாக நடிகை அசின் கூறியுள்ளார்.
மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) நடிகை அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். இதனையடுத்து ஜனவரி 19-ம் தேதி அன்று இருவருக்கும் தில்லியில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். அடுத்ததாக ஜனவரி 23 அன்று மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில் தான் சினிமாவில் இருந்து விலகிவிட்டதாக ஓர் அறிக்கையில் அசின் கூறியுள்ளார். இன்ஸ்டரகிராம் வலைத்தளத்தில் அவர் பதிவு செய்துள்ளதாவது:
இந்தத் தகவல் அறியாத ஊடக நண்பர்களுக்கு மீண்டும் இதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் புதுப்படங்களை தற்போது ஒப்புக்கொள்வதில்லை. என் திருமணத்துக்கு முன்பே விளம்பரம் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிட்டேன். அதனால் நான் படங்களில் நடிப்பது குறித்து யூகத்தில் செய்திகள் வெளியிடவேண்டாம். இந்தத் தருணத்தில் நான் படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளேன். இந்த முடிவை நான் திருமணத்துக்கு முன்பே அறிவித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.