0
1980-ல் வரும் பெண் வேடத்துக்காக திரிஷா 5 மணி நேரம் ‘மேக்கப்’ போட்டு நடித்தார்.
முன்னணி கதாநாயகிகள் காதல் கதைகளில் இருந்து மாறுகிறார்கள். வித்தியாசமான கதைகள், தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அனுஷ்காவுக்கு அருந்ததி படத்துக்கு பின் இதுபோன்ற படங்கள் அமைந்தன. ருத்ரமா தேவி, பாகுபலி படங்களில் ராணி வேடம் ஏற்றார். இதற்காக வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்றார்.
நயன்தாரா ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். அனாமிகா படத்தில் தீவிரவாதியான கணவனை கொலை செய்யும் பெண்ணாகவும், மாயா படத்தில் பேய் வேடத்திலும், நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாகவும் வந்து திறமையை காட்டினார். திரிஷாவும் இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். அவர் தற்போது நடித்து வரும் நாயகி, மோகினி ஆகிய இரு படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள்.
இதில் நாயகி படம் முடிவடைந்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அவர் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு நடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இரண்டு வேடங்களில் வருகிறார். அதில் ஒன்று 16 முதல் 18 வயது தோற்றம். இந்த வேடத்தில் 1980 கால கட்டத்தில் வரும் பெண்ணாக நடித்து இருக்கிறார். இதற்காக தினமும் 5 மணி நேரம் மேக்கப் போட்டாராம்.
படக்குழுவினர் வருவதற்கு பல மணிநேரத்துக்கு முன்பே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து மேக்கப் போட்டு நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். பட்டுச்சேலையில் அரிவாள், சூலாயுதம் பிடித்து அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்கான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் தூண்டி இருக்கிறது. இதுபோன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார்.