Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி அழகர்சாமியின் குதிரை: அ. யேசுராசா

அழகர்சாமியின் குதிரை: அ. யேசுராசா

3 minutes read

அழகர்சாமி என்ற சாதாரண மனிதனின் ‘அப்பு’ என்ற குதிரை காணாமற்போகிறது. அக்குதிரையால்தான் அவன் வருவாய் ஈட்டுகிறான்; நிச்சயிக்கப்பட்ட திருமணம் குதிரை காணாமல் போனதால் கேள்விக் குரியதாகிறது; குதிரையைத் தேடித் திரிகிறான். மல்லையாபுரத்தில் அழகர்சாமி கோவிலிலுள்ள குதிரைவாகனமும் காணாமற்போகிறது. மலையாள மந்திரவாதி மூன்று நாள்களில் அது கிடைக்குமென் கிறான்; ஒரு நாள் நிஜக்குதிரையொன்று ஊருக்குள் வருகிறது. அது தெய்வத்தின் அதிசயம் என மந்திரவாதி சொல்கிறான்; மக்களும் நம்புகின்றனர். அழகர்சாமியும் மல்லையாபுரம் வந்ததில் தனது குதிரையைக் காண் கிறான்; அதை மீட்டுச்செல்லும் முயற்சியில் ஊரவர்க ளுடன் முரண்பட நேர்கிறது. இறுதியில், தான் கள வெடுத்து ஒளித்துவைத்த மரக்குதிரையை ஆசாரி இரகசியமாய்க் கொண்டுவந்து கோவிலில்வைக்கிறார்; ஊர் இளைஞர்களின் உதவியால் தனது குதிரையைப் பெற்ற அழகர்சாமி தனது ஊருக்குத் திரும்புகிறான். நிஜக்குதிரை பழையபடி மரக்குதிரையானதும் தெய்வ சக்தியாலென மக்கள் நம்புகின்றனர்! இக்கதையில் இடையீடாக ஒரு ஜோடியின் சாதி மறுப்புக் காதலும் அழகாகச் சித்திரிக்கப்படுகிறது; பெண் மோகத்தில் அலையும் ‘மைனர்’ பாத்திரமும் எதிரிடையாக வரு கிறது.

 மனிதரின் நல்ல பக்கங்களை – பரிவை வெளிப் படுத்தும் இடங்கள் பல, மனதை வெகுவாகக் கவர் கின்றன.

 அ) கறுப்பு நிறத்துடன் உருவத்திலும் அழகற்றவ னான அழகர்சாமி, திருமணம் செய்யப் பெண் பார்க் கப்போய், அவள் சிவப்பாய் அழகுடன் இருப்பதைக் கண்டு சோர்ந்துபோகிறான். “அவளுக்கும், தனக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்கவேண்டுமென்ற உணர்வு இருக்குமே…. இது நமக்கு வேணாம்” எனத் தனிமையில் குதிரைக்குச் சொல்கிறான். தற்செயலாய் அதனைக் கேட்ட அந்தப் பெண் அவனின் நல்ல மனதைக் கண்டு, அவனை ஏற்கத் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.
 ஆ) தனது குதிரையைக் கொண்டுசெல்ல முயன்ற அழகர்சாமியை ஊரார் அடித்துத் தூணுடன் கட்டி விடுகின்றனர். ஊர்ப் பெண்ணொருத்தி, “மனுசத் தன்மையே இல்லையா?” என்று ஊராரை ஏசியபடி அவனது கட்டுகளை அவிழ்த்து, குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறாள்; பிறகு பரிவுடன் உணவும் கொடுக் கிறாள். இவ்வாறே இன்னொரு திருடனைக் கட்டிப்

போட்டபோது, அழகர்சாமி பரிவுடன் அவனுக்கு ஆறுதல் கூறி உணவு கொடுக்கிறான்.

 இ) ஊர் இளைஞர்கள் இரவில் குதிரையைக் கொண்டு தப்பிச் செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தர முனைந்த போது, திருவிழாச் சந்தோஷம் ‘களைகட்டிய’ சூழலில், எல்லோரின் சந்தோஷத்தையும் சிதைத்துவிடும் என்ப தால் அதை ஏற்க மறுத்து, திருவிழா முடியும்வரை தான் காத்திருப்பதாக அழகர்சாமி சொல்கிறான்.

 ஈ) களவெடுத்த குதிரை வாகனத்தை ஆசாரி மீளவும் கோவிலில் வைத்தபோது இளைஞர் குழுவிடம் அகப் பட்டு, தன் நிலையைச் சொல்லிக் கெஞ்சுகிறார். அவர்கள் அவரைக் காட்டிக் கொடுக்காமல் விடுவ தோடு, அவரது பொருளாதார இக்கட்டைத் தீர்ப்பதற் காகப் பிறகு பொருள் உதவியும் செய்கின்றனர்.

 மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளும் கேலியாக அம்பலப்படுத்தப்படுகின்றன.

 அ) மலையாள மந்திரவாதியை ஊரார் நம்பு கின்றனர். ஆனால், அவர் குறிசொல்லப் பயன்படுத்தும் சிறிய மண்டையோட்டுச் சோழிகள் இரண்டை எடுத்து மறைக்கும் பிரபு என்ற சிறுவன், கேலியாகச் சொல் கிறான் : “இதக் கண்டுபிடிக்க முடியாதவரா குதிரை யைக் கண்டுபிடிக்கப் போறார்?”

 ஆ) பக்தியுடன் நம்பிக்கைகொண்டு வரும் மக்க ளிடம், பொருள்களையும் பணத்தையும் பெற்றுக் கொள்வதிலேயே மந்திரவாதியும் உதவியாளும் காட்டுகின்ற அக்கறை!

 இ) தெய்வசக்தி கொண்டதெனக் கருதப்பட்ட குதிரை, மந்திரவாதியையும் பிரமுகரையும் வேறுபலரையும் கால்களால் மிகமோசமாக உதைத்துத் தாக்குவது!

ஈ)இறுதிக்காட்சியில், தனது மகன் “சாதி குறைந்த” பெண்ணைத் திருமணம் செய்ததைக் கேள்விப்பட்ட ஊர்ப் ‘பிரசிடென்ற்’, சாமி ஊர்வலத்தின்போது, “இது சாமிக்கே பொறுக்காது. இனி இந்த ஊர்ல மழையே பெய்யாது…. பெய்யாது….” என்று சாபமிடும்போது, திடீரென மழை பெய்கிறது; எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி.

 இன்னுமொரு சிறப்பு பாத்திர உருவாக்கம். சாதாரண மனிதனான அழகர்சாமி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், பறையடிப்பவர், பிரசிடென்ற், மந்திரவாதி, கிராமத்து மனிதர்கள், காதல் ஜோடி, மைனர், சிறுவன், இன்ஸ்பெக்ரர், இரகசியப் பொலிஸ் எனப் போலியாக நடிப்பவர், கோடாங்கி ஆகிய பாத்திரங்களெல்லாம், தோற்றத்திலும் பேச்சிலும் நடிப்பிலும் இயல்பாக உள்ளனர். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பாக வுள்ளது; அழகிய ‘சட்டகங்கள்’ திரைப்படமெங்கும் விரவிக் காணப்படுகின்றன; குறிப்பாக நிலக்காட்சிச் சித்திரிப்புகள் ஓவியம் போலுள்ளன!

 இளையராஜாவின் இசையும் அருமை. காட்சிகளின் சூழலுக்கு ஒன்றி – அவை மனதில் பதிய உதவும் இசை. பாடல்களும் இனிமையாக. ஒரு பாடல் மட்டும்தான் ஊர்ப் பெண் பாத்திரத்தால் கொச்சைமொழியில் வாயசைத்துப் பாடப்படுகின்றது; ஏனைய பாடல்கள் வாயசைக்கப்படாமல் பின்னணியாக வருமாறு அமைக்கப்பட்டுள்ளமை இயல்புத்தன்மையையும் தருகிறது.

 சாதாரண மனிதர்களையும், அவர்களது வாழ்க்கை யின் சில பக்கங்களையும் சிறப்பாகத் திரைமொழியில் படைத்துத் தந்திருக்கிறார் நெறியாளர் சுசீந்திரன்; அவரைப் பாராட்டுவோம்!

அ. யேசுராசா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More