December 2, 2023 11:25 pm

தீபாவளி ரிலீஸ் விபரம் இதோ!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜிகர்தண்டா டபுள் X

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – நடிகர் ராகவா லாரன்ஸ் கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் என பலர் இணைந்து நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் X’ திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக 8 வருடங்கள் கழித்து சரியாக தீபாவளி திருநாளான நவம்பர் 12ஆம் திகதி வெளியாகிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதோடு, படத்தில் வரும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளமை சிறப்பு.

ஜப்பான்

ராஜு முருகனின் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியாகிறது, ‘ஜப்பான்’ திரைப்படம். இதில் கார்த்திக்கு ஜோடியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்து பிரபலமான அனு இமானுவேல் நடித்துள்ளார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரெய்டு 

அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் அதிரடி அக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ரெய்டு’.

இந்தப் படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் முத்தையா படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

டைகர் 3 

இயக்குநர் மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைப், ரேவதி என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அக்ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம் ‘டைகர் 3’. அத்தோடு, இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான், ஹ்ருத்திக் ரோஷன் ஆகிய பிரபலங்கள் சிறப்புத் ‍தோற்றத்தில் வந்துபோவது கூடுதல் சிறப்பு.

2012இல் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘ஏக் தா டைகர்’ படத்தின் 3ஆம் பாகமே இந்த ‘டைகர் 3’ திரைப்படம்.

இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனய் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ப்ரீத்தம் மற்றும் தனுஷ் டிக்கு ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வருகிற தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

தி மார்வெல்ஸ்

நியா டகோஸ்டா இயக்கத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வெளியாகும் அதிரடி திரைப்படமான ‘தி மார்வெல்ஸ்’ மார்வெல் சூப்பர் ஹீரோ பட வரிசையில் இணைந்து வெளியாகவுள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் திகதி உலகமெங்கும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

‘கேப்டன் மார்வெல்’ கரோல் டான்வர்ஸ், ‘மிஸ் மார்வெல்’ கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய மூன்று வலிமையான பெண் கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வருகின்றன.

லேபில்

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் டிஸ்னி + ஹொட்ஸ்டார் ஸ்பெஷல் வழங்கும் வெப் சீரிஸ் தொடர் ‘லேபில்’. இந்த தொடர் தீபாவளியை முன்னிட்டு ஹொட்ஸ்டார் செயலியில் நவம்பர் 10ஆம் திகதி முதல் வெளியாகவுள்ளது.

இந்த வெப் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மஹேந்திரன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இயக்குநர் திரைக்கதை எழுதுவதிலும் கவனம் செலுத்தியதோடு, ஜெயச்சந்திர ஹாஷ்மி மேலதிகமாக திரைக்கதை, வசனங்களை எழுதியுள்ளார்.

கிடா

இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் பூ ராம், காளி வெங்கட் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிடா’. இந்த படத்தினை ரவி கிஷோர் தயாரிக்க, தீசன் இசையமைத்துள்ளார்.

ஆட்டுக்கும் மனிதனுக்குமான பிணைப்பை படத்தில் எடுத்துக்காட்டுவதோடு, தீபாவளி எதிர்பார்ப்பு கதைக்குள்ளும் ஊடுருவியுள்ளது.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 11ஆம் திகதி வெளியாகிறது. எனினும், படம் வெளியாவதற்குள் சிறந்த விமர்சனங்களையும் விருதுகளையும் வென்றுள்ளதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சிகளிலும் தீபாவளி கொண்டாட்ட திரைப்படங்கள் 

இவ்வருடம் தீபாவளி பண்டிகையன்று சின்னத்திரையிலும் சினிமா கொண்டாட்டங்கள் ஏராளமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தென்னிந்தியாவின் பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள  நெல்சன் திலீப்குமார் இயக்கி ரஜினிகாந்த் நடித்த  ‘ஜெயிலர்’, ஹெச்.வினோத் இயக்கி ‘தல’ அஜித் குமார் நடித்த ‘துணிவு’, மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு போன்றோர் நடித்த ‘மாமன்னன்’, அசோக் செல்வன் இயக்கி சரத்குமார் நடித்த ‘போர் தொழில்’, விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து, தயாரித்த ‘பிச்சைக்காரன் 2’ போன்ற சமீபத்தில் வெளியான திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்