இந்திய நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். அவர்களது நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது.
அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக Hindustan Times தகவல் வெளியிட்டுள்ளது.
இருவரும் காதலிப்பதாக சில ஆண்டுகளாக வதந்திகள் பரவின. எனினும். அவற்றை இருவரும் மறுத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்றிலிருந்து சமூக ஊடகத்தில் அவர்களது நிச்சயதார்த்தம் பற்றிய செய்தி பரவியது. அதனைத் தம்பதியிடம் கேட்டறிந்த Hindustan Times தகவலை உறுதிசெய்தது.
தெலுங்குத் திரைப்படங்களில் அதிகம் இடம்பெறும் விஜயும் ராஷ்மிகாவும் ‘Geetha Govindam’,’Dear Comrade’ ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.
பல நாட்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிச்சயதார்த்த விழா மிகவும் தனிப்பட்ட முறையில், இரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். விஜய தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய நட்சத்திரமாக மாறிய விஜய் தேவரகொண்டா, நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் முதலில் இணைந்து நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது.
அதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போதிருந்தே அவர்களது காதல் உறவு வலுப்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான காதல் விவகாரம் ஊடகங்களில் பல கேள்விகளை எழுப்பியது.
ஆனால், இருவரும் தங்கள் உறவு குறித்து நேரடியாக பதிலளிக்காமல், மறைமுகமாகவே பதிலளித்து வந்தனர். சமீப காலமாக, தங்கள் காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தியதன் மூலம், அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்பது தெளிவாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரின் திருமணத்தையும் விமர்சையாக நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
