சிக்கன் பிடிக்கும் அனைவரும் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பது வழக்கம். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இந்த மிளகு சிக்கன் ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள். காரமும், மிளகின் நறுமணமும் கலந்த இந்த சிக்கன், சாப்பிட்டவுடன் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும் அளவுக்கு அட்டகாசமான சுவையை தரும்.
பொதுவாக மிளகு சிக்கனை பல விதமாக செய்வார்கள். ஆனால் இந்த முறையில் செய்தால், வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் எளிதாக தயார் செய்யலாம். அதிலும் இதை சாதம், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
மிகவும் குறைந்த பொருட்களிலேயே சுலபமாக செய்யக்கூடிய இந்த மிளகு சிக்கன் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 1/2 கிலோ
* மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* தயிர் – 1/2 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது
வறுத்து பொடி செய்வதற்கு…
* மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்துக் கொண்டு, அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் கெட்டி தயிரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலைத் தூவி கிளறி, 10-15 நிமிடம் எண்ணெய் பிரிய வேக வைத்து இறக்கினால், சுவையான பெப்பர் சிக்கன் தயார்.