செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு நெடுங்கவிதை | புறாக்களுடனா என் உறவு இன்றோடுமுடிவுக்கு வருகிறது | மனுஷ்ய புத்திரன்

நெடுங்கவிதை | புறாக்களுடனா என் உறவு இன்றோடுமுடிவுக்கு வருகிறது | மனுஷ்ய புத்திரன்

1 minutes read

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு வந்த சில மாதங்களில்
எனக்கு ஒவ்வாமை நோய் வந்தது
உடலெங்கும் அரிப்புடன்
ரத்தக் கோடுகள் தோன்றின

மருத்துவர் பல்வேறு யூகங்களுக்குபிறகு
என்னிடம் கேட்டார்:
’’ நீங்கள் இருக்குமிடத்தில்
புறாக்கள் இருக்கிறனவா?’’

நான் ஆமோதித்தேன்
‘’ ஒவ்வாமைக்கு
அது ஒரு காரணமாக இருக்கலாம்
புறாக்களின் எச்சங்கள் காய்ந்த பிறகு
அவற்றின் துகள்கள் காற்றில் பறந்து
உங்கள் சுவாசத்தில் கலக்கலாம்
எனவே உங்கள் ஜன்னல்களுக்கு
வலை அடித்து விடுங்கள்’’ என்றார்

எல்லாப் பிரச்சினைகளின்
தீர்வுகளுக்குப் பின்னாலும்
ஏதேனும் ஒரு துயரம் இருக்கும்;
நான் புறாக்களினால்
எச்சத்தினால் வரும்
ஒவ்வாமையிலிருந்து
விடுபட வேண்டும் எனில்
புறாக்களிலிருந்தே
விடுபட வேண்டுமா?

ஒவ்வாமையுள்ள
எத்தனை உறவுகளோடு
நான் அன்பின் நிமித்தமாக
கடமையின் நிமித்தமாக
குற்ற உணர்வின் நிமித்தமாக
இருந்திருக்கிறேன் என்பதை
ஒரு கணம் நினைத்துக்கொண்டேன்

ஒவ்வாமைக்காக
நான் எதையாவது
கைவிடவேண்டும் என்றால்
என் வேலைகள்
என் இலட்சியங்கள்
என் நம்பிக்கைகள்
என் காதல்கள் எல்லாவற்றையும்
கைவிட்டிருக்க வேண்டும்

ஜன்னல்களுக்கு வலை அடிக்கும்
அந்த யோசனையை
அன்றோடு நான் மறந்துவிட்டேன்
ஏனெனில் அந்தப் புறாக்கள்
எப்படியோ என் வாழ்க்கைக்குள் வந்துவிட்டன

நான் இந்த
அடுக்குமாடிக் குடியிருப்பிறகு வந்தபோது
என் வாழ்விலிருந்த
எத்தனையோ ஒளிகளை
இழந்துவிட்டு வந்தேன்
என் நேசத்திற்குரியவர்களுக்கும்
எனக்குமான பாலங்கள்
உடைந்த நிலையில் வந்தேன்
ஒரு காலைத் தேநீரை
இனி யார் தருவார்கள் என்ற
நிச்சயமின்மையோடும்
தனிமையோடும் வந்தேன்
தோற்றுப்போய் வந்தேன்
வெறியேற்றப்பட்டு வந்தேன்
வெறும் கைகளோடு வந்தேன்
யாருமில்லாமல் வந்தேன்

புறாக்கள்
அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடங்களில்
நாளெல்லாம் அமர்ந்திருந்தன
இடையறாத காதல் வாழ்வில் திளைத்திருந்தன
முட்டைகள் இட்டன
குஞ்சுகள் பொறித்தன
குஞ்சுகள் வளர்ந்து பறந்து சென்றன
புறாக்கள் மீண்டும் காதல் கொண்டன

வாழ்வின் முழுமையான சுழற்சியில்
அவை நாளெல்லாம்
காற்றில் சுழன்றன

இரவுகளில் புறாக்கள் குணுகும் ஒலி
அழுகுரல் போல
அமைதியிழக்க வைக்கும்

காலையில் சூரிய ஒளியில்
புறாக்கள் அமைதியாக குளித்துக்கொண்டிருப்பதை
முதற்காட்சியாக காண்பேன்

புறாக்களின் கண்கள்
மனிதக் கண்களின் சாயல் கொண்டவை
நான் அவற்றைப் பார்க்கும்போதெல்லாம்
அவையும் என்னைப் பார்த்தன

நான் மணிக்கணக்கில்
புறாக்களை பார்த்துக்கொண்டு
மாடிப்படியில் அமர்ந்திருந்தேன்
என்னைவிட்டுப் போனவர்கள்
ஒவ்வொருவரின் பெயரைம்
ஒவ்வொரு புறாவுக்கும் இட்டேன்

மனிதர்களுக்குப் பதிலாக
புறாக்களைப்பற்றி
கவிதைகள் எழுதத் தொடங்கினேன்
அவை எதனாலோ
மனிதர்களைப் பற்றிய
கவிதைகளாவே இருந்தன

புறாக்களுக்கும் எனக்குமான வாழ்வு
இன்றோடு முடிவுக்கு வருகிறது
ஒட்டுமொத்தமாக
நிர்வாகத்தால் முடிவெடுக்கபட்டு
புறாக்கள் அடையும்
அனைத்து மாடங்களிலும்
இன்று வலை அடித்து மூடிவிட்டார்கள்

வலை அடிப்பவர்கள்
மேல் தளத்திலிருந்து கயிற்றைத் தொங்கவிட்டு
தலை கீழாகத் தொங்கியபடி
ஒவ்வொரு மாடமாக வலையிட்டு
மூடிக்கொண்டே வந்தார்கள்

புறாக்கள் சமீபத்தில் இட்ட முட்டைகள்
கூட்டித் தள்ளப்படுகின்றன
புறாக்கள் பதற்றமாய்
அங்கும் இங்கும்
சுற்றிச் சுற்றிப் பறக்கின்றன
பச்சை நிற வலையை
ஆவேசமாய்க் கொத்துகின்றன
கைப்பிடிச் சுவர்களில்
இயலாமையின் கோபத்தோடு
அமர்ந்திருக்கின்றன

நாளை அவை எங்காவது சென்றுவிடும்
ஏதாவது ஒரு இடத்தை
தனது இடமாக்கிகொள்ளும்
அவற்றிற்கு வாடகைக்கு
வீடு தரமாட்டேன் என
யாரும் சொல்ல மாடடார்கள்
’ஹவுஸ் ஓனர்கள்’
அவற்றின் இருப்பை
அன்றாடம் கேள்விக்கு
உள்ளாக்க மாட்டார்கள்
ஆனால் நான் இங்கேயேதான் இருப்பேன்

இந்த நாள்
புறாக்களை மனமுடையச் செய்கிறது;
என்னையும்கூட.
அது எதிர்பாராத தாக்குதல்
வேடனின் வலையில்
புறாக்கள் சிக்கிக்கொள்வதுபோன்றதுதான்
ஒரு வலைக்கு வெளியே
புறாக்கள் தடுத்து நிறுத்தப்படுவது

இவ்வாறுதான் நானும்
என் வாழ்விடங்களிலிருந்து
வெளியேற்றப்பட்டேன்
என்பதை நினைக்கிறேன்
இடம் மாறும் ஒவ்வொரு முறையும்
இவ்வாறுதான் பரிதவித்தேன்
என்பதை நினைக்கிறேன்
மக்கள் திடீரென கூட்டம் கூட்டமாக
இவ்வாறு அவர்கள் வாழ்விடங்களிலிருந்து
வெளியேற்றப்படும் காட்சிகளை நினைக்கிறேன்

நாம் ஒரு வாழ்க்கை முறைக்கு
பழக்கப்படுகிறோம்
திடீரென ஒரு நாள்
அது எதனாலோ மாற்றப்படுகிறது

புறாக்கள் என் வாழ்க்கை முறையிலிருந்து
இன்றோடு விலக்கப்படுகின்றன

புறா இருந்த மாடங்கள்
இனி இந்தக் குடியிருப்புகளிம்
எப்போதும் சாத்தியிருக்கும்
கதவுகள்போல நிசப்தம் குடிகொண்டுவிடும்

புறாக்களுக்கும் எனக்குமான வாழ்வு
இன்றோடு முடிவுக்கு வருகிறது

நான் இனி
புறாக்களைப் பற்றி
கவிதைகள் எழுத மாட்டேன்

மனுஷ்ய புத்திரன்

14.9.2026
இரவு 7.48

ஓவியம் – Colourful Delights (இலங்கை சிறுவர்கள்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.