இங்கிலாந்தில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லாத அரசியல் பிரமுகர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர், இந்த புதிய திட்டத்தின் கீழ் பிரபுக்கள் சபையின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவசர மற்றும் சுயாதீன மீளாய்வு ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும் உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தக் கட்சியின் (Reform UK) ஊடகப் பேச்சாளரும் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆன் விடெகோம்ப் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சுத்தியலால் தலையில் 21 முறை தாக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தப் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாகவும், சீர்திருத்தக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜிக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரிலும் ஜோசுவா கெர்ரி என்ற 28 வயதுடைய நபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு வருடங்களாக முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தகவல்களைத் திரட்டியதுடன், இலண்டனிலுள்ள நைஜல் ஃபராஜின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கீழ்சபையில் திங்கட்கிழமை உரையாற்றிய ஷபானா மஹ்மூத், அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் இயல்பானவை என்றும், ஆனால் மிரட்டல்கள், அவதூறுகள் மற்றும் வன்முறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்றும் வலியுறுத்தினார்.
இந்த பாதுகாப்புத் திட்டத்தின் முழு விபரங்களை அவர் உடனடியாக வெளிப்படுத்தாத போதிலும், பிரத்தியேக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தொடர்பு மற்றும் பரந்தளவிலான பாதுகாப்பு வசதிகள் இதில் உள்ளடக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மெட்ரோபொலிட்டன் பொலிஸாரின் நாடாளுமன்ற இணைப்புப் பிரிவுக்கு 2019 முதல் 2025 வரையான காலப்பகுதியில் 4,064 குற்றச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பெரும்பாலானவை அவதூறுப் பரப்பல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பானவையாகும்.
குறிப்பாக கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 50 கொலை அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.