இருட்டு அவளை எங்கோ ஒரு பாதாளத்துக்கு இழுத்துச் சென்றது. இப்படி ஒரு இருட்டு வந்து அவளைச் சூழ்ந்து கொள்ளும் என்று வேணி கனவு கூட கண்டதில்லை. இருட்டுத்தானா…. அல்லது கண்ணை மூடியதால் இருட்டாய்த் தெரிகிறதா….
இல்லை… இல்லை… கண்ணை விழித்துப் பார்த்தாலும் இருட்டாய்த்தான் இருக்கிறது. ஐயோ… ஐயோ… என்று மனம் பதகளிப்படுகிறது. வலக்கை ஊன்றி எழுந்து அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். விளக்கு அணைந்து போயிருந்தது. மறுபடி அதைக் கொழுத்தி வைக்கத் தோன்றவில்லை. ஓயாமல் அழுததால் முகமெல்லாம் பிசு பிசு என்று ஈரமாய் இருந்தது. வலக்கையால் முகத்தைத் துடைத்தாள். இடது கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டிருந்தது. கையில் ஒரு வாரமாய் வலி இருக்கிறது. வேதனை தாங்க முடியாமல் ஆஸ்பத்திரிக்குப் போனால்,
‘எலும்புக்குள் செருகிக் கொண்டு சன்னம் இருக்கு. ஒப்பறேஷன் செய்து எடுக்கேலாத நிலமை. அதாலதான் நோ இருக்கு.’ என்று ஒவ்வொரு தடவையும் வலி குறைவதற்கு பெனடீன் அல்லது பனடோலைக் கொடுத்து விடுவார்கள். அதைக் குடித்தாலும் நோ என்னவோ அப்ப அப்ப வந்து போய்க் கொண்டுதான் இருக்கும். அந்த வலிக்கு மேலாக இப்போது புதிதாய் வந்திருக்கும் மரணவலி.
இப்போது நேரமும் சாமம் கடந்திருக்கும். நேற்று பொழுதுபடும் நேரம் அந்தச் செய்தியை குணத்தான் வந்து சொன்ன நேரத்திலிருந்து அதிர்ந்த மனது அதிர்ந்தபடியே இருக்கிறது. “என்னடா சொல்லுறாய்…” என்று கேட்ட குரல் அவள் காதுக்கே கேட்கவில்லை.
“ஓமக்கா. கருவாடு கட்ட மன்னாருக்கு போனனான்தானே. அங்க தான் செல்வராசண்ணையைக் கண்டனான். நாளைக்கு சனிக்கிழமை இங்க வாறாராம்.”
நேரில கண்டனியா என்று கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ளக் கூட குரல் ஒத்துழைக்கவில்லை.
என்ர முருகா… நான் என்ன செய்வன்…
பழைய துவாயால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
சாணகம் மெழுகிய மண்தரையில் பழைய பாயில் படுத்திருந்த பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து அழுதாள்.
கடவுளே… நாளைக்கு அவன் வந்து முன்னால் நிற்கும் போது எந்த முகத்தோடு அவனைப் பார்ப்பது… அதைவிடச் செத்துப் போகலாம் போல் தோன்றியது.
நான் திரும்ப வராமல் அப்பிடியே செத்துப் போயிருப்பன் எண்டு நினைச்சு இன்னொரு கலியாணம் கட்டினனியா என்று கேட்டால் என்ன மறுமொழி சொல்வது….
ச்சீ… என்ன கேவலப்பட்ட வாழ்க்கை இது…
இப்போது இருட்டு கண்களுக்குப் பழகிப் போனதில் குடிசைக் கதவு கொஞ்சம் திறந்திருப்பதையும் அதன் மூலம் சிறிது வெளிச்சம் வருவதையும் பார்க்க முடிந்தது.
திரவியம் படுக்கையில் இல்லாதது தெரிந்தது. ‘பக்’ கென்றது மனம். எங்கே போயிருப்பான்…
குணத்தான் இவனுக்கும் முன்னால்தான் செல்வராசா வர இருப்பதைச் சொன்னான். அதிலிருந்து இவன் முகம் இருண்டு போய்க் கிடக்கிறது. ஒரு வார்த்தை சொல்லவில்லை. இரவு சாப்பிடவும் இல்லை. அவளுக்குப் பயமாக இருந்தது. வாசல் கதவினூடாக எட்டிப் பார்த்தாள். வெளித்திண்ணையில் கப்போடு சாய்ந்து அமர்ந்து வானத்தையும் முற்றத்து தென்னை மர உச்சியையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மறுபடி அரைச் சுவரோடு சாய்ந்து அமர்ந்து அழத் தொடங்கினாள். எத்தனையோ அவலப்பட்டு துன்பப்பட்டு ஓடாத ஓட்டமெல்லாம் ஓடி இங்கு வந்து இந்த நிலையிலா நிற்க வேண்டிக்கிடக்கு…
பிறந்த நாளிலிருந்து துன்பம் தான்… குடிசை வாழ்க்கை தான்… கூலிவேலை தான். ஐயா அம்மாவோடு அவளும் இளவயதிலேயே வயலுக்கு புல்லுப் பிடுங்க போகத் தொடங்கியவள். அந்த நாட்களிலே அரை வயிறுக்காவது சோறு சாப்பிட முடிந்தது. வேலைக்குப் போகாத நேரங்களில் இரண்டு தம்பிகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருப்பாள். ஊரில் இருப்பவர்களுக்கு மா இடித்துக் கொடுப்பாள். எட்டாவது வகுப்புடன் படிக்கப் போகவில்லை.
மருதப்பு விதானையாரின் வயல்காணியின் ஓரத்து மேட்டு நிலத்தில் குடிசை போட்டு இருந்தார்கள். ஐயா தான் விதானையாரின் வயல்களையும் பார்த்துக் கொண்டிருந்தார். விதானையாரின் வயலுக்கு உரம் போட, சூடடிக்க என்று வந்த செல்வராசாவைக் கண்டு விரும்பி இருபத்திநாலு வயதில் அவனோடு ஓடிப்போய் இன்னொரு குடிசை வாழ்க்கை.
காசு பணம் வசதி என்று இல்லையே தவிர செல்வராசா என்னவோ நல்லவன் தான். எப்போதாவது குடிப்பான். கொஞ்சம் சண்டையும் போடுவான். ஆனாலும் அவளோடும் குழந்தையோடும் அன்பாய் தான் இருந்தான். சண்டை நேரங்களின் போது வெடிச் சத்தங்களின் அதிர்வு தாங்காமல் இடம் பெயர்ந்து ஓடிப் போவதும் தூர இருந்து விட்டு திரும்புவதுமாய் நாட்கள் போயின. இரண்டு தம்பியும் வீட்டில் இல்லை. ஒரு தம்பியை பெட்டிக்குள் வைத்துக் கொண்டு வந்து தந்தார்கள். மற்றவன் எங்கே என்று இன்று வரை தெரியாது.
அன்று நொந்து தளர்ந்து போயிருந்த ஐயா அம்மாவையும் அழைத்துக் கொண்டு ஒரு வயது மதியுடன் நீண்ட ஒரு இடப்பெயர்வு.. பரந்தனிலிருந்து விசுவமடு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, மாத்தளன், முள்ளிவாய்க்கால் என்று அலைந்த நாட்கள். அப்போதெல்லாம் சாப்பிடவும் வழியில்லாமல் பட்டினி கிடந்த நாட்கள் ஏராளம். ஒரு வாய் கஞ்சி குடிக்க, பட்ட அவலம், பசியில அழும் மதியைப் பார்த்து மனம் கலங்கிய நாட்கள் அவை. முள்ளிவாய்க்காலின் கடைசி நாட்கள்…
இடைவிடாமல் அதிர்ந்து கொண்டிருந்த சத்தங்கள்… காற்றில் பரவியிருந்த வெடி மருந்தின் வாசனை… அலைமோதிக் கொண்டிருந்த சனங்கள்.
“குழந்தையளுக்கு கஞ்சி குடுக்கினமாம். வாங்கி வாறன்” என்று சொல்லி செல்வராசா போனான். அன்று முழுக்க அவன் திரும்பவில்லை.
இரண்டு நாட்களாகியும் வரவில்லை. கலக்கம் பிடித்துக் கொண்டது.
“ஆமி ஒவ்வொரு பக்கமாய் உள்ளட்டு சனத்தை சுத்தி வளைச்சுப் பிடிச்சுக் கொண்டு போகுதாம்” என்று சனங்கள் ஆளுக்காள் கதைத்த போது அடிவயிறு கலங்கியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது பக்கத்து கொட்டில் ஐயா வேர்க்க விறுவிறுக்க வந்து சொன்னார்.
“கஞ்சி குடுக்கிற கொட்டிலில அண்டைக்கு ஷெல் விழுந்து நிண்ட சனம் ஏழெட்டு செத்துப் போச்சுதுகளாம். மற்ற ஆட்கள் ஒவ்வொரு பக்கம் ஓடினதுகளாம். இரண்டு நாளாய் காயப்பட்ட சனம் அதிலயே கிடந்ததுகளாம். செல்வராசாவுக்கும் என்ன நடந்துதோ தெரியாது பிள்ளை… தப்பியிருந்தால் வந்திருக்கும் தானே…”
ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அதேநேரம் வந்து விழுந்த ஷெல்லில் தூக்கி எறியப்பட்டு மயங்கி விழுந்தவள் தான் கண்திறந்த போது வவுனியா ஆஸ்பத்திரியில் இருந்தாள். செல்வராசா வந்தானா இல்லையா… ஐயா அம்மா மதி… அவர்களுக்கு என்ன நடந்ததோ…
ஒரு மாதத்தில் இடது கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்ட நிலையில் செட்டிகுளம் முகாமில் விடப்பட்டாள். அங்கே ஒருவாறு தேடி அம்மாவையும் மதியையும் கண்டாள். ஷெல் விழுந்து வெடிச்சதில ஐயா அந்த இடத்திலேயே இறந்ததாய் அம்மா சொல்லி அழுதாள். அம்மா மதியை தூக்கிக் கொண்டு சனத்தோடு வந்திருக்கிறாள். கஷ்டம் அத்துடன் தீரவில்லை. திரும்ப திரும்ப காய்ச்சல் வந்ததில் முகாமுக்கு வந்த ஆறு மாதத்தில் அம்மாவும் இறந்து போனாள். உலகில் தானும் மதியும் அநாதரவாய் நிற்பதை உணர்ந்த போது அழக்கூட சக்தியற்றவளானாள். முகாமின் முள்ளுக் கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த ஆரம்ப நாட்களில் செல்வராசாவைப் பற்றி விசாரிக்கக் கூட முடியாதிருந்தது. அதன் பிறகு மதியையும் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக விசாரித்துக் கொண்டு அலைந்தாள். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
“கஞ்சி வாங்கிக் கொண்டிருந்த இடத்தில தான் எங்கட அண்ணையும் நிண்டவர். ஷெல் விழ திக்குத் திசை தெரியாமல் ஓடினதில இவை ஆமியின்ர பக்கம் ஓடியிருக்கினம். பத்துப் பதினைஞ்சு பேரை வாகனத்தில ஆமி ஏத்திக் கூட்டிக் கொண்டு போனவையாம். போய்ப் பத்து நிமிசத்தில வெடிச் சத்தங்கள் கேட்டதாம். ஆமி சுட்டிருப்பாங்கள் போல கிடக்கு. அம்மா வீட்டில ஒரே அழுகை.”
என்று இந்திரன் கவலையோடு சொன்னான்.
இது உண்மையாய் இருக்குமோ என்று நினைத்தாலே மனம் நடுங்கியது.
முகாம் வாழ்க்கை முடிவுக்கு வர மீள் குடியேற்றம் என்று திரும்ப ஊருக்கு வந்தார்கள்.
குடிசை இருந்த அடையாளமும் இல்லை.
“குடிசை போட்டு இருந்து கொள்” என்று விதானையார் சொன்னார். குணத்தானும் இந்திரனும் தான் குடிசை போட்டுக் கொடுத்தார்கள். அதுவரை, பாதி இடிந்து போயிருந்த தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தில் அவளும் மதியும் தங்கியிருக்க இந்திரனின் அம்மா அனுமதி தந்தாள். பத்து நாட்களில் தன் குடிசைக்கு இருக்க வந்தாள். தனியே குழந்தையுடன் குடிசையில் இருக்கவும் பயமாக இருந்தது. வீதியில் போகும் ஆமிக்காரன் வந்து தண்ணி வேணும் என்று கேட்ட போது பயம் வந்தது. தெருவில் நாலு பேர் சேர்ந்து நின்று கதைக்கும் குரல் கேட்டால் கூட நடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை. முன்பு போல புல் பிடுங்கவோ மா இடிக்கவோ போக முடியவில்லை. ஒற்றைக் கையால் என்ன வேலை செய்ய முடியும்… காதுத் தோடு விற்று செல்வராசாவைத் தேடி அலைந்தாள். வவுனியா போகும் போது இந்திரனின் தாய் தகப்பன் தங்களோடு அவளையும் கூட்டிப் போய் தங்கள் மகனோடு செல்வராசாவையும் தேடிப் பார்த்தார்கள்.
செஞ்சிலுவைச் சங்கத்தில் முறைப்பாடு கொடுத்தார்கள். காணாமல் போனோரின் பெற்றோர்கள் உறவுகள் செய்யும் அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் அவளும் மதியோடு கலந்து கொண்டாள். இப்படியே நாலு வருஷம் போனது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. ஆமி கூட்டிக் கொண்டு போய்ச் சுட்டிருக்க வேண்டும் என்று இந்திரன் சொன்னது உண்மையாய் இருக்க வேண்டும் என்றே நினைக்கத் தோன்றியது. கடவுளே… என்ன செய்யப் போகிறேன்… எப்படி இந்தப் பிள்ளையை வளர்க்கப் போகிறேன்…. என்று மனம் பதகளித்துக் கொண்டேயிருந்தது.
சொந்தக் காணி இல்லாததால் வீட்டுத் திட்டமும் அவளுக்கு கிடைக்கவில்லை. விதானையார் அரச பொறுப்பில் இருந்தவர்களுடன் கதைத்துப் பார்த்தும் சரி வரவில்லை. சொந்தக் காணி இது என்று உறுதிப்படுத்தினால் தான் வீட்டுத் திட்டம் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள். இனி கடைசிவரை இந்த குடிசை வாழ்க்கை தான்.
ஊருக்குள் இருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் வெளிநாடுகளிலிருந்து வந்தால் அவளுக்கும் ஐந்தோ பத்தோ கொடுப்பார்கள். விதானையார் ஆட்களோடு கதைத்து அவளுக்கு அவ்வப்போது ஏதும் உதவி கிடைக்கச் செய்வார். மலர் ரீச்சரின் மகள் ஜேர்மனியிலிருந்து வந்த போது இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்கி வளர்க்கக் கொடுத்தாள். இந்த உதவிகளினால் தான் அரை வயிற்றையேனும் நிரப்ப முடிந்தது.
இந்திரன் அம்மாவுக்கு முன்பு மா இடித்துக் கொடுத்தாலோ வேறு தொட்டாட்டு வேலை செய்து கொடுத்தாலோ தாராளமாய் காசு, அரிசி, தேங்காய் தந்து உதவுவாள். இப்போது பெரும் அளவில் அரிசி இடிக்க ஏலாது. எப்போதாவது தோசைக்கு இட்டலிக்கு போட்டிருக்கிறன். வந்து ரெண்டு சுண்டு அரிசி இடிச்சுத் தா என்று கேட்டால் போய் ஒற்றைக் கையால் இடித்துக் கொடுப்பாள். காணிக்குள் இருக்கும் தேங்காய்களைப் பொறுக்கிக் கொடுப்பாள். தரும் சாப்பாட்டை பிள்ளையோடு பகிர்ந்து சாப்பிடுவாள்.
இப்படித்தான் அரைவயிற்று நிரப்புதலோடு வாழ்க்கை போகப் போகிறதா… என்ற கலக்கம், இப்படி தனிய இருப்பதில் ஏழ்மை மட்டுமன்றி வேறு பிரச்சனைகளும் இருந்தது.
அடுத்தடுத்த கிராமங்களில் இராணுவம் சுற்றி வளைத்து வீடுகளுக்குள் நுழைகிறது என்ற செய்தி வரும்போதெல்லாம் பயமாக இருக்கும். நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் நடுக்கமாய் இருக்கும். நிம்மதியாக நித்திரையும் கொள்ள முடிவதில்லை.
செல்வராசா இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி எந்நேரமும் மனதுக்குள் குடைந்து கொண்டே இருந்தது. இருந்தால் இந்த நாலு வருஷத்திலும் தகவலாவது சொல்லி அனுப்பியிருப்பானே. இனி இந்தப் பிள்ளைக்காக உயிரைக் கையில் பிடித்து வாழ வேண்டியது தான். அந்நேரம் அடை மழைக்காலம். முற்றமெல்லாம் தண்ணீர் தேங்கியிருந்தது. அவளின் குடிசை ஒரு பக்கம் சரிந்து விழுந்திருந்தது. அதைச் சரிப்படுத்த இந்திரன் திரவியத்தைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான்.
திரவியம் முன்பு இயக்கத்தில் இருந்த போதே அவர்களுக்கு அவனைத் தெரிந்திருந்தது. இந்த ஐந்தாம் வாய்க்கால் பக்கம் தான் திரவியம் நடமாடிக் கொண்டிருப்பான். செல்வராசாவோடு நல்ல பழக்கம்.
இப்போது தோற்றமே மாறிப் போயிருந்தான். நன்றாய் தளர்ந்து மெலிந்திருந்தான். ஆமியிடம் போய் புனர்வாழ்வு பெற்று ஆறுமாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகி வந்ததாய் இந்திரன் சொன்னான். ஊருக்குள் மரவேலை பெயிண்ட் வேலைகள் செய்ய வருவான். அன்று திரவியம் தான் சரிந்து விழுந்த அவள் குடிசையை சரிப்படுத்திக் கொடுத்தான். காசு எவ்வளவு வாங்குவானோ என்ற யோசனையோடு கேட்டதுக்கு “விதானையார்தான் சரிப்படுத்திக் குடு. காசு நான் தாறன் எண்டவர். நான் அங்க வாங்கிறன்” என்றான்.
“திரவியண்ணைக்கும் ஒருதரும் இல்லை. குஞ்சுப்பரந்தனில ஷெல் விழுந்ததில தாய் தகப்பன் தம்பி எல்லாரும் பங்கருக்குள்ளயே செத்துப் போயிட்டினமாம். இவர் சண்டையில நிண்டதில அதுகளைப் பார்க்கக் கூட இல்லை. பிறகு ஆமியிட்ட போய் இப்ப விடுதலையாகி வந்த பிறகு தான் எல்லாம் அறிஞ்சவராம். பாவம்…”
இந்திரன் கூறியதைக் கேட்க எத்தனை பேருக்கு இந்த அவலம்… என்று கவலையாக இருந்தது.
ஒருநாள் இந்திரனின் அம்மா கேட்டாள். “நீயும் பிள்ளையோட தனிச்சுப் போய் இருக்கிறாய். திரவியம் உன்னை கலியாணம் செய்யக் கேக்குது… என்ன சொல்லுறாய்…”
அவள் கொஞ்சமும் இதை எதிர் பார்க்கவில்லை.
“ஐயோ… ஏன் இப்பிடிக் கேட்டது. எனக்கென்னத்துக்கு கலியாணம் வேணாம் அம்மா…” என்றாள்.
“இல்லையடி வேணி. நீயும் ஒரு கையை வைச்சுக் கொண்டு இந்தப் பிள்ளையை எப்பிடி வளர்ப்பாய் சொல்லு. நீ தனிய இருக்கிறதும் நல்லதில்லை. உன்ர பிள்ளையையும் தான் வடிவாய்ப் பாப்பன் எண்டு திரவியம் சொல்லுது. அவனையும் தெரியும் தானே. உழைச்சு உங்களையெல்லாம் பாக்கும். அதுக்கும் ஒருதரும் இல்லை.”
“எனக்கு மனசில்லை அம்மா” தழுதழுத்து நின்றாள்.
“இஞ்சை பார் வேணி செல்வராசா எங்காவது இருந்தால் இந்த நாலு வருசத்தில வந்திருப்பான். இல்லை தகவலாவது சொல்லியனுப்பியிருப்பான். பிடிச்சு வைச்சிருக்கிறவையின்ர பேர் லிஸ்ற்றில செல்வராசான்ர பேர் இல்லை எண்டு செஞ்சிலுவைச் சங்கம் சொல்லிப் போட்டுது. நீ யோசிக்காதையடி”
இரண்டு நாளாய் மனம் குழம்பி தவித்தாலும் சூழ்நிலையின் தாக்கம் ஓம் என்று சொல்ல வைத்தது.
திரவியம் அவளையும் மதியையும் அன்பாய் தான் பார்த்தான். ஊரில் வீட்டுத் திட்டங்கள் வந்ததால் தச்சு வேலை ஓரளவு கிடைத்தது. எந்த வேலை என்றாலும் ஓடி ஓடிப் போய்ச் செய்வான். குடிசையை முன்பக்கம் திண்ணை வைத்து திருத்தி கட்டி அத்தோடு மட்டை வரிச்சு, குசினியையும் தனியாய் கட்டினான். குழந்தைப் பிள்ளை இருக்கிற இடத்தில குடிசைக்குள்ள நெருப்பு எரிக்கக் கூடாது என்பான். கிளிநொச்சியில் இருக்கிற நகைக் கடைக்குக் கூட்டிப் போய் காதுக்குத் தோடு வாங்கித் தந்தான். இந்த மூன்று வருஷத்தில் ஓரளவு சாப்பிட்டு நிம்மதியாய் இருக்க முடிந்தது. இந்த தைமாதம் ஒரு ஆம்பிளைப் பிள்ளையும் கிடைத்தது. இரண்டு பிள்ளைகளுக்கும் திரவியம் வித்தியாசம் காட்டியதில்லை. காலில் சப்பாத்துடனும் தோளில் புத்தகப் பையும் தொப்பியுமாய் மதி பாடசாலை போவது சந்தோஷத்தைத் தந்தது. இப்படியே வாழ்க்கை போயிருக்கலாம்.
குணத்தான் சொன்ன செய்தியில் அத்தனை சந்தோஷமும் அடித்துக் கொண்டு போய் விட்டது. உலகமே இருண்டு போனது மாதிரி இருந்தது. திரும்பவும் வாசலை எட்டிப் பார்த்தாள். திரவியம் அதே மாதிரி அமர்ந்திருந்தான்.
அவள் சுருண்டு கொண்டு படுத்தாள்.
நிலம் விடியும் போது எழுந்து பார்த்த போது திரவியம் வாசல்புற வேலியோரம் நின்று கொண்டிருந்தான். அவள் அடுப்பை மூட்டி கேற்றில் வைத்து தேனீர் போட்டுக் கொண்டு போய்க் கொடுத்த போது ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டான்.
அவனிடம் என்ன கதைப்பது என்று தெரியவில்லை. அவன் என்ன நினைக்கிறான் என்பதையும் ஊகிக்க முடியவில்லை. ஏதாவது அவன் சொல்வான் சொல்ல வேணும் என்று மனம் எதிர்பார்த்தது. அவன் கண்களிலும் கவலை பயம் தெரிந்தது. அவன் எதுவும் பேசாமல் இருப்பது அவள் கலக்கத்தை இன்னும் அதிகரித்தது.
அன்று பத்து மணியளவில் விதானையாரின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச திரவியம் போக வேணும். அப்படி போகும் நாளில் காலையிலேயே சமைத்து சாப்பாட்டைப் பெட்டிக்குள் போட்டுக் கொடுத்து விடுவாள். அன்றும் யந்திரம் போல சமையலைத் தொடங்கினாள். சோறும் இரண்டு கறியும் காய்ச்சி இறக்கி வைத்து விட்டு சாப்பாட்டுப் பெட்டியை எடுத்த நேரம்
“அம்மா… ஆரோ வந்திருக்கினம்…”
மதியின் குரல் கேட்க ‘திக்’ கென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. வெளியே வந்தாள்.
செல்வராசா… ஏழு வருஷத்தின் பின் நரைவிழுந்து மெலிந்து சோர்ந்து நின்ற அவனைப் பார்த்து விக்கித்துப் போய் நின்றாள். நடுங்கும் வலக்கையால் வாசல் கப்பை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
கையில் கொண்டு வந்திருந்த பிஸ்கற் பெட்டியை மதியிடம் கொடுத்து விட்டு திண்ணையில் அமர்ந்தான். மதியை வா என்று பக்கத்தில் அமர வைத்து தடவினான். அவன் கண்கள் கலங்கிப் போயிருந்ததைப் பார்த்து அவளுக்கும் தொண்டை அடைத்தது. ஒரு வார்த்தை வெளிவரவில்லை.
மதி தயங்கி இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். திரவியத்தைக் காணவில்லை. என்ன செய்வது… என்ன கதைப்பது…
கப்பை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
“எப்படி வேணி இருக்கிறாய்…”
அவன் எதிர்பார்க்கிறானோ ஓடிவந்து கட்டிப் பிடித்து அழுவேன் என்று.
“ஒருக்கா உங்களையெல்லாம் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உனக்கு கை இல்லாமல் போனதும் ஐயா அம்மா செத்துப் போனதும் இப்ப தான் அறிஞ்சனான். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய்…”
மெல்லிய குரலில் சொல்லி வந்தவன் ஒரு நிமிஷம் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
“நீ திரவியத்தைக் கட்டியிருக்கிறது எனக்குத் தெரியும். அது தெரிஞ்ச பிறகுதான் வரவேணும் போல இருந்தது.”
அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள்.
கண் நிரம்பிய நீர் பொல பொலவென்று வழிந்தது. துடைத்துக் கொண்டு பார்த்தாள். வேலியருகில் தயங்கி நின்ற திரவியத்தைப் பார்த்து “வா திரவியம்” என்று கூப்பிட்டான்.
“அண்டைக்கு நிண்ட இடத்தில ஷெல் விழ சிதறுப்பட்டு ஓடி திக்குத் திசை தெரியாமல் ஆமியின்ர பக்கம் போயிட்டம். அப்பிடியே எங்களை அள்ளிக் கொண்டு போயிட்டாங்கள். எத்தினையோ இடங்களில மாறி மாறி வைச்சிருந்தாங்கள். இடம் வலம் ஒண்டும் தெரியேலை. ஒரு தொடர்பும் இல்லை. அடி ஆய்க்கினையில நூலாக்கிப் போட்டாங்கள். கடைசியாய் பூசா வரை வைச்சிருந்து போட்டு மூண்டு வருசத்துக்கு முன்னதான் வெளியில விட்டவங்கள். என்னோட பூசாவில இருந்து என்னோட வெளியில வந்த பெடியன்ர குடும்பம் தான் என்னை வைச்சப் பாத்தது. காய்ச்சலும் இருமலுமாய் அறிவு நினைவில்லாமல் கிடந்தனான். அதுகளோட தான் இப்ப மன்னாரில இருக்கிறன்.”
அவன் ஒரு நிமிடம் தயங்கி விட்டுச் சொன்னான்.
“அதுகள் வீட்டுப் பிள்ளையை நானும் கட்டி இருக்கிறன். மூண்டு வருஷமாகுது. அப்பிடி ஒரு சூழ்நிலை. உன்னை நினைச்சு குற்ற உணர்வு. எப்பிடி இருக்கிறீங்களோ எண்டு அடிக்கடி நினைப்பன். நீ திரவியத்தை கட்டினதை அறிஞ்ச பிறகு தான் நிம்மதி. அதுதான் பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்”
கடவுளே… தலைமேல் உள்ள பாரம் பொல பொலவென உதிர்ந்து காற்றில் பறப்பதாய் உணர்ந்தாள். எல்லாமே லேசாகிப் போனது போலிருந்தது.
திரவியம் உள்ளே ஓடிப் போய் தேனீர் போட்டு எடுத்து வந்து கொடுத்தான். தேனீரைக் குடித்து விட்டு செல்வராசா எழுந்தான்.
“சாப்பிட்டுப் போங்கோ. சமைச்சாச்சு” திரவியம் கேட்டான்.
“இல்லை… இல்லை… எனக்குப் பசிக்கேலை. போயிட்டு வாறன்.”
எல்லோரையும் பார்த்து தலையசைத்து விட்டு முற்றம் கடந்து நடந்தான். அவள் திரவியத்தைப் பார்த்தாள்.
“இருங்கோ. சாப்பாட்டை பெட்டிக்குள்ள போட்டுத் தாறன்.”
அவள் அடுக்களைக்குள் ஓடிப் போய் பெட்டிக்குள் சோறு கறிகளைப் போட்டாள்.
மனம் நிம்மதியாய் இருந்தது.
ஆனாலும் ஏனோ ஓவென்று கத்தி அழவேண்டும் போலவும் இருந்தது.
கதை : ஓவியம் | தாமரைச்செல்வி
நன்றி : ஜீவநதி | பெண்கள் சிறப்பிதழ் | ஜனவரி 2017


