மாரி மழையை
நிலத்தடி கொண்டு செல்வேன்
என் தலையில் மண்ணெண்ணெய்
ஊற்றாதீர்கள்
உங்கள் நீராதாரம் வற்றிப்போகும்
என்னை வாழ விடுங்கள்.
வயலோரம் நான் பிறந்தது தவறில்லை
வயல்களுக்கு தெரியும் நான் கொடுத்த பலன்
என்னை சூழ்ந்த வண்டுகள் அறியும்
நான்செய்யும் சேவை
என்னை வாழ விடுங்கள்.
என்னை முழுமையாய் ஒப்படைத்தேன் உங்களுக்கு
நீங்கள் கையேந்த தேவையில்லை
என்னை வாழ விடுங்கள் .
யாரும் உயர்வது பிடிக்காத
நிலத்தில் நான் பிறந்தேன்
அதனால் என் உயர்வு உங்களுக்கு பிடிக்கவில்லையோ.
நான் நெடுத்து மரித்தால்
உன் வீட்டு உத்தரம்
என்னை செதுக்கி எடுத்தால்
உன் இல்லக் கூரையாகும்.
உங்கள் அந்தரங்கத்தை அறிந்ததால்
என்னை அவசரமாக அழிக்காதீர்கள்
நான்தான் உங்கள் ஆதாரம்
என்னை வாழ விடுங்கள்..
என் அழகு தெரியாத கண்களுக்கு
நான் பற்றை
என்னை அறிந்த உங்களுக்கு தருவேன் என் பற்றை
என்னை வாழ விடுங்கள்.
நான் இடிதாங்க உயர்தேன்
என்னை அழித்து
உங்கள் கூரைகளில் இடி தாங்காதீர்கள்
என்னை அழித்து உங்களையும் அழிக்காதீர்கள்
என்னை வாழ விடுங்கள்
உங்களை வாழ வைக்கிறேன்.
என்னை அழித்து
எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய முடியும்
நான் தரும் இதமான நிழலைதவிர
என்னை வாழ விடுங்கள்.
என்னை நம்பிய பூச்சிகள்
வாழட்டும்
என் இருப்பிடம் விட்டு என்னை அழிக்க நினைப்பதும்
மனித அதிகார வாதம் தான்
நீங்கள் அகதியாக தப்பித்து விடலாம்
நான் அநியாயமாக அழிந்தே போகிறேன்
என்னை வாழ விடுங்கள்
வட்டக்கச்சி வினோத்