தோற்ற நேரத்திலன்று
தேற்ற மறந்து – நமக்கு
தோல்விப் பட்டம் – சூட்டிய
தொகையில் பலர்.
பகையில் விலகி – நம்
எதிரில் நின்று – நமை
ஏமாற்றிக் கொண்டு
பரிதவிக்க விட்டாரன்று.
பல்லாயிரம் தமிழர்
பதறிய போதும் – அன்று
பல் நாட்டுத் தூதரகம்
பல்லிழித்துக் கிடந்தது.
தார்மீக தேசத்தில் – இன்று
தாரூற்றிப் போட்ட – அந்த
வீதியில் பறந்த போது
நடந்தது மறந்து போகிறார்.
போரின் கருவொன்று
போகவில்லை கருகி.
காரிருள் சூழ்ந்தும் – இங்கே
காணாது போகவில்லை.
மறைந்து விட்ட – அந்த
மாந்தர் நினைவில்,
மாவீரர் தியாகம் – என்றும்
வீண் போகவில்லை.
ஒரு நாள் மாறும் – நாமன்று
நினைத்தது போலொரு
விடுதலை கிடைக்கும். – கூடவே
நாம் தோற்றதும் மாறும்.
ஏய்த்து ஏமாற்றி – நமை
ஏறெடுத்துப் போனவர்
ஏளனச் சிரிப்பை – தாம்
விடுத்துத் திரும்பி வருவார்.
தாய்த் திருநாடாகிய – நம்
தமிழ் ஈழமண்ணில் – அவர்
புயெலென வீசிய காற்றில்
கலந்த கதை பேசுவார்.
நாம் – காலம் தெரிந்து;
நம் – கதைகள் மூடுவோம்.
திரைவிலக்கி தீரமதை
தீக்கிரை ஆக்காதிங்கே.
நதுநசி