March 27, 2023 5:33 am

மாயா ஏஞ்சலோ கவிதைகள் | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மாயா ஏஞ்சலோ (1928 – 2014)

1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர்.

வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர். தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார்.

ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

 

மில்லியன் மக்கள் பேரணிக் கவிதை

 

இரவு நீண்டிருக்கிறது

காயம் ஆழமானதாயிருக்கிறது

இருண்டிருக்கிறது பள்ளம் – அதன்

சுவர்கள் செங்குத்தானவை

 

தொலைதூர சமுத்திரக் கரைதனில்

மரித்துப் போன நீல ஆகாயத்தின் கீழ்

நீங்கள் எட்ட இயலாத் தொலைவில்

கூந்தலால் பிடிக்கப்பட்டு நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்

உங்கள் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன

உங்கள் வாய்கள் கட்டப்பட்டிருந்தன

குறைந்தபட்சம் உங்களால்

எனது பெயர் கூறி அழைக்கக் கூட

இடமளிக்கப்படவில்லை

எந்தவொரு ஆதரவுமற்ற நீங்களும்

என்னைப் போலவே

ஆனால் துரதிர்ஷ்டவசமாக

வரலாறு முழுவதும் நீங்கள்

அவமானம் எனும் அடையாளத்தைச் சுமந்தபடி

 

மீண்டும் சொல்கிறேன்

இரவு நீண்டிருக்கிறது

காயம் ஆழமானதாயிருக்கிறது

இருண்டிருக்கிறது பள்ளம் – அதன்

சுவர்கள் செங்குத்தானவை

 

ஆனாலும் இன்று

புராதன ஆத்மாக்களின் ஒலி எழுகிறது

நூற்றாண்டுகளையும் வருடங்களையும் கடந்து

சமுத்திரங்களையும் கடல்களையும் தாண்டி

ஆழமான வார்த்தைகளால் எம்மிடம் உரைக்கின்றன

‘ஒன்றாயிணைந்து இனத்தைக் காப்பாற்றுங்கள்

தொலைதூர இடமொன்றில் விடுதலை வேண்டி நீங்கள்

ஏற்கெனவே இழப்பீட்டைச் செலுத்தி விட்டீர்கள்’

 

எமது அடிமைச் சங்கிலிகள்

விடுதலை வேண்டி மீண்டும் மீண்டும்

தம் இழப்பீட்டைச் செலுத்தியதை

அவை நினைவுபடுத்துகின்றன

 

இரவு நீண்டிருக்கிறது

காயம் ஆழமானதாயிருக்கிறது

இருண்டிருக்கிறது பள்ளம் – அதன்

சுவர்கள் செங்குத்தானவை

 

நாம் வாழ்ந்த,

இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும்

நரகமானது,

எமது புலன்களைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது

எமது இலக்குகளை இறுக்கமாக்கியிருக்கிறது

 

இரவு நீண்டிருக்கிறது

இன்று காலை உங்கள் வேதனைகளினூடு

உங்கள் ஆன்மாக்களை எட்டிப் பார்த்தேன்

ஒருவரோடு ஒருவர் நம்மை நாமே

பூரணப்படுத்திக் கொள்ளலாமென நானறிவேன்

 

உங்கள் நிலைப்பாட்டினூடும் மறைந்த மாறுவேடத்தினூடும்

நான் பார்த்தேன்

உங்கள் கபிலநிற விழிகளில் தேங்கியிருந்த

உங்கள் குடும்பம் மீதுள்ள நேசத்தை நான் கண்டேன்

 

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்

இணைந்துகொள்வோம் இச் சந்திப்பு மைதானத்தில்

 

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்

பழகிக் கொள்வோம் ஒருவரோடொருவர் நேசத்தோடு

 

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்

ஒன்றாய் எழுவோம் தாழ்ந்த பாதையினூடு

 

கை தட்டுங்கள் ஒன்றாக வந்து

வெளிப்படுத்துவோம் எம் இதயங்களை

 

ஒன்றாயிணைந்து வருவோம்

எமது மனநிலைகளை மாற்றியமைக்க

 

ஒன்றாயிணைந்து வருவோம்

எமது ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்த

 

கை தட்டுங்கள் இறுமாப்புக்களைக் களைந்து

எம் வரலாற்றைத் திரிபுபடுத்துவதை நிறுத்துவோம்

 

கை தட்டுங்கள்

ஓரங்கட்டப்பட்ட ஆன்மாக்களை அழைப்போம்

 

கை தட்டுங்கள்

வரவேற்போம் நாம்

எமது உரையாடல்களில் மகிழ்ச்சியை

எமது படுக்கையறைகளில் மரியாதையை

எமது சமையலறைகளில் கருணையை

எமது முன்பள்ளிகளில் பாதுகாப்பை

 

மூதாதையர் நினைவுருத்துகின்றனர்

வரலாறானது வேதனை மிக்கதெனினும்

நாம் முன்னே செல்லும் வழித்தோன்றல்களென்பதையும்

மீண்டும் எழும் மனிதர்களென்பதையும்

 

நாங்கள் எழுவோம்

மீண்டும் மீண்டும் !

 

குறிப்பு – அமெரிக்காவில் வசித்த பத்து இலட்சத்துக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் வாஷிங்டன் டீ.சி.யில் ஒன்று கூடி தமது உரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே ‘Million Man March’ என அழைக்கப்படுகிறது. 1995.10.06 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியானது, அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை நடைபெற்றிருந்த மக்கள் ஒன்றுகூடல்களிலும் பார்க்க, விசாலமானதாக அமைந்திருந்தது.

article-0-0F73DA4000000578-345_634x421

 

 

 

நன்றி:  பதிவுகள் இணையம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்