என் தேசம் ஆசியாவின் ஆச்சரியம் | கிரிஷாந்த்ராஜ்

என் தேசம்
ஆசியாவின் ஆச்சரியம் என்பதற்கு
சில காரணங்களைச்
சொல்கிறேன் கேளுங்கள்!

அட்டைகளும் முதலாளியும்
இரத்தம் உறிஞ்ச
உழைத்த தொழிலாளி
குளவிக்கொட்டில் சாவான்!

மத்திய கிழக்கிற்கு
ஏற்றுமதி செய்யப்பட்டவர்கள்
பிணமாக இறக்குமதி
செய்யப்படுவார்கள்!

கொரோனா பற்றி
வைத்தியர் சொல்ல
வேண்டியதை
இராணுவத் தளபதி
சொல்வார்!

வைரஸைத் தடுக்க
தமிழர் நிலத்தில் மட்டும்
சோதனைச் சாவடிகளை
இராணுவம் திறக்கும்!

காணிக்குரியவன்
பிச்சையெடுக்க
அவன் நிலத்தில் இராணுவம்
விவசாயம் செய்து
‘மலிவு விலையில்’ விற்கும்!

அவர்களே வீட்டை அழித்து,
பதிலுக்கு புது வீடு கட்டி,
அவர்களே திறப்பு விழாவையும்
நடத்துவார்கள்!

தொல்பொருள்
மரபுரிமைகள்
பெளத்தம் சார்ந்ததாக
மட்டுமே இருக்கும்!

போதனைக்குப் பதிலாக
தேரர்கள் அரசியல்
பரப்புரை செய்வார்கள்!
அரசியலமைப்புப் பற்றி
அறிவுரையும் சொல்வார்கள்!

முஸ்லிம்கள்
தீவிரவாதிகள் என்றும்
தமிழர்கள்
பயங்கரவாதிகள் என்றும்
முத்திரை குத்தப்படுவார்கள்!

விசாரணைக்கென்று
கண் முன்னே
ஒப்படைக்கப்பட்டவர்கள்
காணாமல் ஆக்கப்படுவார்கள்!
காணாமற்போனோர்
பட்டியலில்கூட,
பலரின் பெயர் இருக்காது!

வெறும் சில
மாதங்களே நிரம்பிய
தன் சிசுவை
தந்தையே கற்பழித்து
கழுத்து நெரித்துக் கொல்வான்!

மிளகாய்த்தூள் வீசி
விளையாடியவர்களும்
பைபிளால் எறிந்து
தாக்கியவர்களும்
மீண்டும் பாராளுமன்றம்
செல்வார்கள்!

செவிட்டோரம் போய்
கதறினாலும் காது
கேட்காதவர்களையும்
ஒரே குடும்பத்தில் ஐவரையும்
முட்டாள் வாக்காளர்கள்
தெரிவு செய்வார்கள்!

நடப்பதற்கே தெம்பின்றி
வயது முதிர்ந்து,
சொகுசு வீட்டைச்
சலுகையாய்ப் பெற்றவர்,
குடிசை வீட்டு மக்களின்
தலைவராவார்!

தமிழைச் சொல்லி
உசுப்பேற்ற ஒருவர்,
எந்தெந்த நாடுகள்
கொன்று குவித்தனவோ
அந்தந்த நாடுகள்
தீர்வு தருமென்று
நம்ப வைக்க இருவர் என்று
எங்களுக்குள் முட்டிமோத
எத்தனையோ கட்சிகள்!

குளு குளு அறையில்
கூடிக் கூத்தடித்து
பள பள குவளையில்
தண்ணீர் அருந்தி
மக்கள் தாகம் அறியாத
ஆட்சியாளர்களை
மெச்ச ஒரு கூட்டம்!

என் தேசம்
ஆசியாவின் ஆச்சரியமல்ல
உலக அதிசயம் என்றாலும்
ஆச்சரியப்படுவதிற்கில்லை!

கிரிஷாந்த்ராஜ்

ஆசிரியர்