செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தீராக் கணக்கு | செ.சுதர்சன்

தீராக் கணக்கு | செ.சுதர்சன்

1 minutes read

ஒரு வராலாற்று ஆசிரியரைக் கேட்டேன்,
ஒரு பத்திரிகையாளரைக் கேட்டேன்,
ஒரு குடிசனப் பதிவாளரைக் கேட்டேன்,
எல்லாவற்றுக்கும் மேலாக
ஓர் அரசியல்வாதியை…
கேட்கக்கூடாது என்றார்கள்,
ஆனாலும் கேட்டேன்!

ஒரு ஊழி வரையுமான முழுக்கணக்கு
இல்லையெனிலும் பரவாயில்லை,
அது முடிந்த
வாய்க்கால் வரையுமான கணக்கு
சுமாராக எவ்வளவு இருக்கும்?

திருதிருவென விழித்த அவர்களோ
நமட்டுச் சிரிப்புடன்
‘கணக்கு தமிழுக்குச் சரிவராது!’
என்றார்கள்.

தமிழ்க் கணக்கை விடுங்கள்!
நீங்கள் முடித்த
சிங்களக் கணக்கையாவது
கூட்டிச் சொல்லுங்கள் என்றேன்.
அவர்களோ
‘கழிப்பதற்காவே கணக்குச் செய்தோம்’
என்றார்கள்.

சரி,
கழித்த கணக்கைச் சொல்லுங்கள் என்றேன்.
அவர்களோ
‘முஸ்லிம் கணக்கையும்
அதனோடு கூட்டிச் சொல்லவா?’
என்றார்கள்.

பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன்…
‘தீர்த்த கணக்கோ தீரவில்லை!’
என்றார்கள்.

முன்னாள் போராளி
ஒருவனைக் கேட்டேன்.
அவனோ,
‘நாங்கள் போட்ட கணக்குகளை
எங்களால்கூட எண்ண முடியாது!’
என்றான்.
அவன் மேலும் சொன்னான்
‘போடப் போட
மாறி மாறிப் போட்ட கணக்கோ
முடியாக் கணக்கு’

நானோ…
சரி பராவாயில்லை
யாராவது குத்துமதிப்பாகச் சொல்லுங்கள் என்றேன்!

ஒரு ‘வீடு’!
அதற்குளிருந்து
கூரையைப் பிய்த்துக்கொண்டு
வெளிவந்த குரலோ,
‘பைநிறைய எடுத்து
கைநிறைய வைத்து
எண்ணும் கணக்கோ
ஒரு முடியாக் கணக்கு!
அதில் பிழை இருக்காது
எப்போதும் எல்லாமே
சரியாக இருக்கும்!’
என்றது…

வீட்டுக்குள் இருப்பவர்களே…!
வெளியே வாருங்கள்.
எங்கே ஒருக்கால்
வாயைத் திறவுங்கள்!
என் பிள்ளையின் படிப்புக்காய்
மீதம் உள்ள
ஒரு சொட்டு மண்ணெண்ணையை
ஊற்றுகிறேன்…
விடுதலை பேசிய
உங்கள் வாயை

எரித்துக்கொள்ளுங்கள்.

செ.சுதர்சன் 21/07/2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.