உழவுக் கொள்கை | புலவர் சிவநாதன்

உலகப் பரப்பில் உலவும் தமிழரின்
உழவுக் கொள்கையை உழைப்பின் தன்மையை…
நிலவைக் கதிரை நேசித்து வணங்கி
நீரைப் பாய்ச்சி நிலம் காத்த வண்மையை…
மரபுத் திங்களின் மாண்பாய்க் காண்கின்ற
மானுடப் பண்பாடு உதித்ததைக் கொண்டாடும்
உறவுகள் அனவர்க்கும் உளமார்ந்த வாழத்துகள்!

பழமையின் வழமையைப்
பகிர்ந்து வாழ்தலை..
பகலவன் தாள்களைப்
பணிந்து வழுத்தலை…
இளந்தலை முறையினர்
அறிந்து உணர்ந்திட..
இணைந்தோர் நிகழ்வினை
ஈண்டு படைத்திடல்
நலம்பல நயந்திடும்
என்றே நம்புவேன்!

முன்னோரின் முகங்களை
மரபோடு இணைத்தலும்
தன்னேர் இல்லாத்
தமிழ்தனை அணைத்தலும்
சின்னங்களாகும்
சிந்தனைத் தொடரச்சியே
இன்று யாம் காணும்
இதுபோன்ற நிகழ்வுகள்!

பன்முகத் திசைகளிற்
படரும் பயணத்தில்..
பல்லினச் சூழலிற்
பாயும் தருணத்தில்..
என்னை யாரென்றும்
என்னினம் யாதென்றும்
சொன்ன வரலாற்றைச்
சொந்தமாய்க் கொண்டு
தன்னுட்தானே
தன்முகம் காணும்
மன்குல மாட்சியே
மரபொளியாகும்!

மண்ணை மக்களை
மையப்படுத்திய
மானுட இயக்கத்தின்
மாண்புகளோடு…
முன்னை நிகழ்ந்து
முடிந்தவை வழியே
முகர்ந்த அனுபவ
மூலத்தினூடு..
தொன்மைச் சான்றின்
தொடர்ச்சியைத் தொடரும்
தூய வழிபாடே
மரபெனும் மறையாகும்!

அந்நியப் பிடினில்
அழுந்திடும் மக்களை..
மண்ணை.. மீட்க
எழுந்த போராட்டம்
விண்வரை எழுப்பிய
விடுதலைக் குரலின்
விளைவே இன்றைய
தைத்தினப் பேரோசை
என்பதை எவரும்
மறுத்திட மாட்டார்!

ஏர்ப்பின் இந்த
உலகெனச் சொன்னதும்..
எல்லோரும் இங்கு
சமம் எனச் சொன்னதும்..
நீர்ப்பாசனத்திலும்
நெடுங்கடற் போரிலும்
நிகரிற் கட்டடம்
நிறுவிடும் சீரிலும்
பேர்ப்பாய்க் கப்பல்கள்
பெருங்கடல் செலுத்திப்
பார்க்குப் பல்வகைப்
பண்டங்கள் கொடுத்து
ஊர்த்தாய் உவக்க
உலகினர் பொருட்கள்
ஏற்றித் திரும்பி
இறுமாந்த சிறப்பிலும்..
யார்க்கும் குறையா
மாட்சியே தமிழர்
மரபாமென்று
மதிக்கும் ஒருநிலை
பூத்ததே இந்தப்
பூமியில் இன்று
போரிடும் மறவர்
ஈழத்தில் உதித்ததால்!

ஆயினும் என்செய்வோம்!
அடிமைத் தளைகளை
அறுத்திடும் பொன்யுகம்
அடிபட்டுப் போனது!
தாயகம் இன்னும்
தலைதாழ்ந்து நிற்கின்ற
தரித்திரம் தொடர்வதே
தலைவிதியாயிற்று!

பகையணி நின்றோரும்
பட்டாடை உடுத்தி
நிகழ்வுகள் நடத்தும்
நிலைமை உண்டாயிற்று!
முகநகை மட்டுமே
தகைமையதாக
முன்னோரின் முகங்கள்
புகைநடுவோடிற்று!

உலகதன் மரபு
உண்மையின் வசப்பட..
உரிமைகளோடு
எல்லோரும் நயப்பட..
கலையும் கல்வியும்
அறம் அன்பின் கைப்பட..
கடும்பிணி பசியெனும்
கொடுமைகள் விலகிட…
நெடும்பயணத்தில்
நாமிணைவோமென..
உளமார வேண்டி..
உங்களை வாழ்த்தினேன்!

‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!

புலவர் சிவநாதன்

தமிழவை

ஆசிரியர்