Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பெண்களுக்கு அரை மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா!

பெண்களுக்கு அரை மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா!

3 minutes read

இந்த ஊரடங்கு காலத்தில் குடும்பத் தலைவிகளிடம் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு போன்றவைகளை போக்கி ‘அவரவர் வீடுகளில் இருந்தபடியே அரை மணிநேரத்தில் உடலுக்கும், மனதுக்கும் தேவையான ஆற்றலை பெற்றுவிடலாம்’ என்று கூறி, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நல்ல கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்.

அரை மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா தொடர்புடைய அந்த வாழ்வியல் பயிற்சி முறை பற்றி அவரிடம் கேட்டபோது..

“பெண்களிடம் ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. தினமும் வாக்கிங் செல்வது, ‘ஜிம்’ சென்று பயிற்சி பெறுவது என்று சுறுசுறுப்பாகவே இருந்தார்கள். ஆனால் ஊரடங்கு மூலம் அவை அனைத்தும் முடக்கப்பட்டிருக்கிறது.

உடற்பயிற்சி இல்லாததாலும், கொரோனா நோய் பீதியாலும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது இயல்பாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே மன அழுத்தத்தை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவரவர் வீடுகளிலே தினமும் அரைமணி நேரத்தை செலவிட்டால் போதும்.

அரைமணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த முயற்சிக்காக, அவர்கள் முதலில் தங்கள் மனதை தயார்படுத்தவேண்டும். ‘நான் நலமாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் முயற்சித்தால் என்னால் முடியாதது எதுவும் இல்லை. எனக்கான தீர்வு என்னிடமே இருக்கிறது’ என்பது போன்ற நேர்மறை சிந்தனைகளை மனதில் அதிகரிக்கச் செய்ய வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முதல் தேவை இதுதான்.

பின்பு 2 நிமிடம் பிரார்த்தனை, 5 நிமிடம் சூரிய நமஸ்காரம், 8 நிமிடம் சில ஆசனங்கள், 5 நிமிடம் பிரணாயாமம், 10 நிமிடம் யோக நித்திரை போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த அரைமணி நேஇரத்தை எல்லா பெண்களும் தங்களுக்காக தினமும் செலவிட முன்வர வேண்டும். இந்தப் பயிற்சியால் அவர்களது அன்றாட வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழும். அவர்கள் உடல் வலுப்பெறும். உள்ளம் மகிழ்ச்சி யடையும். அந்த மகிழ்ச்சி குடும்பத்தில் எதிரொலிக்கும்” என்று கூறும் ராஜேஸ்வரி இளங்கோ, அரை மணிநேர பயிற்சிக்கான முழு விளக்கத்தையும் தருகிறார்.

“காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு, சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மூச்சுவிட வேண்டும். அப்போது மூச்சில் முழு கவனத்தையும் செலுத்தவேண்டும். அந்த நேத்தில் அவரவருக்கு பிடித்த கடவுளை மனதில் நினைத்து பிரார்த்திக்கலாம். இதுதான் பிரார்த்தனைக்கான நிமிடங்கள்.

பின்பு உடலை இலகுவாக்குவதற்கான ‘லூசிங் எக்ஸசைஸ்’ செய்யவேண்டும். அப்போது கை, கால் விரல்கள், மூட்டு, இடுப்பு போன்ற பகுதிகளை ‘ரொட்டேட்’ செய்யவேண்டும். அடுத்து சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

பின்பு விருட்சாசனம், புஜங்காசனம், அர்த்த மச்சேந்திராசனம், சக்கராசனம் போன்றவைகளை செய்யலாம். இதன் மூலம் நுரையீரல் வலுப்படும். முதுகெலும்பு பலமாகும். மனஅழுத்தம் நீங்கும். தொப்பை குறைந்து உடல் கட்டுக்குள் வரும். தலைவலி போகும். சோம்பல் அகலும். உடலும், மனதும் புத்துணர்ச்சி கொள்ளும்.

பிரணாயாமம் 5 நிமிடம் மேற்கொள்வது அவசியம். இறுதியில் 10 நிமிடங்கள் செய்ய வேண்டியது, யோக நித்திரை. இதை சவாசனம் என்றும் சொல்வார்கள். அறையில் உங்களுக்கு பிடித்த இசையை ஓடவிட்டு படுத்த நிலையில் உடலை ஓய்வாக்கவேண்டும். அப்போது சிந்தனை முழுவதையும் இசையில் ஐக்கியப்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்” என்று கூறும் ராஜேஸ்வரி இளங்கோ, கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் பெண்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவருமே பதாஞ்சலி முனிவர் சொன்ன 8 வாழ்வியல் நிலைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.

“இயமம் என்ற ஒழுக்கத்தை பின்பற்றும் முறை, ‘நியமம்’ என்ற ஒழுக்க வாழ்வியல் முறை, உடலை குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி வைக்கும் ‘ஆசனநிலை’, மூச்சை ஒழுங்குபடுத்தும் பிரணாயாம நிலை போன்றவை முதல் நான்கு நிலைகளாகும்.

ஐந்தாவது, முற்றிலும் மனதை பக்குவப்படுத்தும் பிரத்யாகாரம் என்பதாகும். அடுத்து மனதை செம்மையாக்கி ஒருமுகப்படுத்தும் ‘தாரணை’ ஆகும். ஏழாவதாக நினைத்ததை சாதிக்கவைக்கும் தியான நிலை. இறுதியில் சமாதிநிலை. இது சிறந்த வாழ்க்கை நடத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் பரிசுபோன்றது. இவைகளை அனைவரும் கடைப்பிடித்து வாழவேண்டும்” என்று விளக்குகிறார்.

‘இப்போது குடும்பங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கோபம் தான் காரணமாக இருக்கிறது. அதை குறைக்க என்ன செய்யலாம்?’ என்று கேட்டபோது, “நாடி சுத்தி பயிற்சி கோபத்தை குறைக்க நல்ல பலன் அளிக்கும். வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல்களை மடக்கிக்கொள்ளவேண்டும்.

பெருவிரலால் வலதுபக்க மூக்கை மூடிக்கொண்டு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள் இழுக்கவேண்டும். பின்பு மோதிரவிரல் மற்றும் சுட்டுவிரலால் இடது பக்க மூக்கை மூடி, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேவிடவேண்டும்.

தொடர்ந்து மாற்றி மாற்றி இவ்வாறு மூச்சு பயிற்சி மேற்கொள்ளவேண்டும். இதை தொடர்ச்சியாக செய்தால் மன அழுத்தமும், கோபமும் நீங்கி பெண்களின் உள்ளத்தில் ஆனந்தமும், முகத்தில் அழகும் ஜொலிக்கும்” என்றார்,

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More