Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் நமது வளர்ச்சிக்கு நாமே எதிரியாகும் போது..!

நமது வளர்ச்சிக்கு நாமே எதிரியாகும் போது..!

2 minutes read

தமக்கு தாமே எதிரியாகிவிடுகிறவர்கள் நிறைய பேர் உண்டு. அதன் மூலம் அவர்கள் வளர்ச்சிக்கு அவர்களே முட்டுக்கட்டைபோட்டுக்கொள்வார்கள். நமக்குள்ளே இருக்கும் நமது எதிரி யார் தெரியுமா? தாழ்வு மனப்பான்மை. இந்த எதிரியிடம் சிக்கிக்கொள்கிறவர்கள், எப்போதும் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களுடைய பண வசதி, நண்பர்கள் வட்டத்தை எல்லாம் பார்த்து தனக்குள் பொறாமைத் தீயை வளர்த்துக்கொள்ளவும் செய்வார்கள்.

தாழ்வு மனப்பான்மை யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தங்களை தாங்களே மனச்சிறைக்குள் அடைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களது சிந்தனையும், செயல்திறனும் குறைந்துபோய் விடும். மனித மனம் எப்போதுமே அகண்ட வானில் சிறகடித்து பறக்கும் பறவைகளை போல விசாலப்பட வேண்டும். எந்த விஷயத்தையும் பரந்த மனதுடன் அணுகும் பக்குவத்தையும் பெற்றிருக்க வேண்டும். நம்மாலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

எல்லோரிடமும் திறமை இருக்கிறது. அதை வெளியே கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து மற்றவர்கள் செய்யும் காரியங்களை மலைப்பாக பார்த்துவிட்டு தம்மால் அதுபோல் முடியாது என்று தாழ்வு மனப்பான்மையால் முடங்கி கிடப்பதில் அர்த்தமில்லை. பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக்கூட தடைவிதித்துக் கொண்டு தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வது நமக்கு நாமே எதிரியாகிவிடுவதற்கு சமம். அது தொடர்ந்தால் வாழ்க்கையே பரிதாபத்திற்குரியதாகிவிடும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை பார்ப்போம்.

சரிதா திருமணமாகி, மூத்த மருமகளாக புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்துவைத்தாள். புகுந்த வீட்டில் உள்ள அனைவர் மனதிலும் சட்டென்று இடம்பிடித்துவிட்டாள். குடும்பத்திற்காக உழைத்தாள். பலவித தியாகங்களை செய் தாள். குடும்பத்தில் உள்ள அனைவருமே அவளை புகழ்ந்தார்கள். ஆனால் அந்த ஆனந்தம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டாவது மருமகள் சுவிதா வந்த பிறகு சரிதாவின் மனம் சலனப்பட்டது. காரணம், சுவிதா, சரிதாவை விட வசதி படைத்தவள். பார்க்க அழகாக இருந்தாள். சரிதாவைவிட அதிகம் படித்தும் இருந்தாள்.

அவளுடைய வசதி வாய்ப்பு சரிதாவின் கண்களை உறுத்தியது. தன்னை விட அனைத்து வகையிலும் அவள் உயர்ந்தவளாக தெரிந்தாள். அதுவே அவளுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. சுவிதாவோடு தன்னை ஒப்பிட்டுப்பார்த்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொண்டாள். அதனால் தனிமையைத் தேடினாள். குடும்பத்தாரிடம் முன்புபோல கலகலப்பாக பேசுவதை தவிர்த்தாள்.

தன்னைத்தானே வருத்திக்கொண்டவள் ஒருகட்டத்தில் அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விரும்பினாள். கணவரை நச்சரித்து தனிக்குடித்தனம் சென்றாள். அதுவே அவள் செய்த மிகப்பெரிய தவறாகிவிட்டது. குடும்பத்தினர் குறைசொன்னார்கள். அதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை உருவானது. சொர்க்கமாக இருந்த சரிதாவின் குடும்ப வாழ்க்கை அதன் பின்பு நரகமாகிவிட்டது.

சரிதாவை போன்று நிறைய பெண்கள் தாழ்வு மனப்பான்மையால் தங்களுடைய சுய மதிப்பை இழந்துகொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களது திறமையும், தனித்துவமும் அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. தங்களை தாங்களே முடக்கிக்கொள்கிறார்கள்.

எந்த வயதினருக்கும் தாழ்வு மனப்பான்மை வரலாம். அவர்கள் வளரும் சூழலும், அவர்களிடம் இருக்கும் திறமையின்மையுமே அதற்கு காரணம். தாழ்வு மனப்பான்மையில் இருந்து அகல தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும். நம்மை நாமே நேசித்தால், நம்மை நாமே தட்டிக்கொடுத்து வேலைவாங்கினால், தாழ்வு மனப்பான்மை அகலும். தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை இருப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More