May 31, 2023 5:59 pm

பல் துலக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய பற்களை கொண்டவர்கள் பெரிய பிரஷை பயன்படுத்தும்போது ஈறுகளை சரியாக சுத்தம் செய்ய முடியாமல் போகலாம். பிரஷை அழுத்தி தேய்க்கும்போது ஈறுகளுக்கு காயமும் ஏற்படலாம். பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகள், உணவு துகள்களை அப்புறப்படுத்த முடியாமலும் போகலாம். மென்மையான பிரஷ்களை தேர்ந்தெடுப்பதே நல்லது.

பற்களின் தன்மைக்கு ஏற்ப பிரஷ் வளைந்து கொடுக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கும் பிரஷை மாற்றுமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிலர் உபயோகிக்கும் பிரஷில் உள்ள தூரிகைகள் சில நாட்களிலேயே உதிர தொடங்கிவிடும். அப்படிப்பட்ட பிரஷை மாற்றிவிடுவதே நல்லது.

காலையில் தாமதமாக எழுந்திருக்கும்போது அவசர அவசரமாக பல் துலக்கிவிட்டு கிளம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பல் துலக்குவதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தினமும் காலையில் இரண்டு நிமிடங்கள் பொறுமையாக பல் துலக்க வேண்டும், காலையும் மாலையும் இரு வேளை பல் துலக்குவதும் அவசியமானது.

பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷை கொண்டு அழுத்தி தேய்க்கும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி தேய்ப்பது ஈறுகளை காயப்படுத்தக்கூடும். பல் இடுக்குகளும் சுத்தமாகாது. அங்கு பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது. அதனால் பல் வலி போன்ற பல் பிரச்சினைகள் உருவாகும். பிரஷை கொண்டு மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பல் துலக்கும்போது பற்களின் மேல் பகுதியை சுத்தம் செய்வதற்குத்தான் அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஈறுகளுக்கு இடையில் உள்ள பகுதிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. ஈறுகளில் ரத்தப்போக்கு, பல்வலி போன்ற பிரச்சினைகள் இதனால்தான் உண்டா கின்றன. பிரஷை 45 டிகிரி கோணத்தில் வளைத்து பற்களை சுத்தப்படுத்த வேண்டும்.

சாப்பிட்ட பிறகு பற்களில் தங்கி இருக்கும் உணவு துகள்களை அகற்றுவதற்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலர் சாப்பிட்ட பிறகும் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் சாப்பிட்ட பிறகு கால் மணி நேரம் கழித்துதான் பல் துலக்க வேண்டும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்