650 உக்ரைன் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு650 உக்ரைன் கைதிகள் கிளர்ச்சியாளர்களால் விடுவிப்பு

உக்ரைனில் தங்களது பிடியிலிருந்த 650 பேரை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

உக்ரைனில், முக்கியத்துவம் வாய்ந்த மாரியுபோல் நகருக்கு, அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ திங்கள்கிழமை வந்திருந்தார்.

அப்போது, கிளர்ச்சியாளர்களுடன் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், 1,200 உக்ரைன் கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சுமார் ஐந்து மாதங்களாக அங்கு நடைபெற்ற சண்டையின்போது கிளர்ச்சியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட 648 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

மேலும் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவை தெரிவித்தன.

அஸாவ் கடல் பகுதியில் அமைந்துள்ள மாரியுபோல் நகரம், கனரக தொழிற்சாலைகளையும், பெரிய துறைமுகம் ஒன்றையும் கொண்டுள்ளது.

ரஷியாவுடன் அண்மையில் இணைக்கப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும், ரஷியாவுக்கும் இடையே இந்நகரம் அமைந்துள்ளது.

எனவே, கிரீமியா நிலப்பகுதியை ரஷியாவுடன் இணைக்கும் நோக்கத்துடன், இந்நகரைக் கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஆசிரியர்